
posted 10th November 2021

ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
ஜனாதிபதி கோட்டாபய அவர்களால் நியமிக்கப்பட்ட ”ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணி சம்பந்தமாக ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் சில ஆலோசனைகளை முன் வைத்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் குறிப்பிட்டிருப்பதாவது,
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் 2019ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து இணைந்து தங்களது வெற்றிக்காக களமிறங்கிய முதலாவது முஸ்லிம் கட்சி என்ற வகையில் ”ஒரே நாடு ஒரே சட்டம்” என்பது பற்றிய எமது கருத்துக்களை தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
1. ஒரே நாடு, எனும் போது இந்த நாடு தற்போது பல நாடுகளாக இருப்பது போலவும், அதனை நீக்கி ஒரே நாடாகவும் மாற்ற முயற்சி எடுப்பது போலவும் தெரிவதால் ஒரே நாடு என்ற கோஷம் நமது நாட்டின் இறைமைக்கு முரணான கருத்து என்பது எமது கருத்தாகும்.
நமது நாடு இன்னமும் ஒரே நாடாக இருப்பதால் ஒரே நாடு, ஒரே நாடாக ஆக்கப்போகிறோம் என்பது கேலிக்கூத்தான கோஷமாக உள்ளது.
2. ஒரே சட்டம், நமது நாட்டில் இன்று வரை ஒரே சட்டமே அமுலில் உள்ளது. அதுதான் அரசியல் யாப்பில் அனைத்து இன மக்களுக்கும் வழங்கியுள்ள சட்டமாகும். அரசியல் யாப்பின் இந்த சட்டத்தின் படியே நாட்டில் நீதித்துறை இயங்குகிறது. அரசியல் யாப்பு சட்டம் என்ற ஒரே சட்டத்துக்கு முரணாக நாட்டில் எந்த சட்டமும் இல்லை.
3. இந்த வகையில் நமது நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டின் கீழ் செயல்படும் போது ஒரே சட்டத்தை கொண்டு வரப்போகிறோம் என்பதும் நகைப்புக்குரிய, யதார்த்தத்துக்கு மாற்றமான கோஷமாகும்.
4. நமது நாடு பிளவு படாமல் ஒரே நாடாகவும், அரசியலமைப்பின் மூலம் சகல மக்களுக்கும், சகல மதங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள சட்டங்களும் அரசியல் யாப்பின் ஒரே சட்டமாகவும் உள்ள நிலையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷம் அர்த்தமற்றதாகும். இவ்வாறு கூறுவதன் மூலம் எதிர் காலத்தில் பல நாடு பல சட்டம் என்ற கோரிக்கையை நாட்டின் பிரிவினைவாதிகள் முன் வைத்து தேர்தல்களை பயன்படுத்தும் நிலையும் வரலாம் என்பதை எச்சரிக்கிறோம்.
5. நாட்டில் உள்ள கிரிமினல் சட்டம் இன்றுவரை ஒரே சட்டமாகவே உள்ளது. இது சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழருக்கு ஒரு சட்டம், முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம் என்றில்லாமல் அனைவருக்கும் ஒரே சட்டம்தான். ஆனால் இச்சட்டத்தை அமுல் படுத்தும் போது இன ரீதியாக நடை முறைப்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும். பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஜேவிபி பெரும்பாலும் சிங்களவர் என்பதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஆனால் பயங்கரவாதத்தில் ஈடுபட்ட சில தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இன்னமும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை.
அதே போல் ஒரு பௌத்த மத தலைவர் தலையில் ஹெல்மெட் இன்றி சென்றால் பொலிசார் அவரைப் பிடிப்பதில்லை. ஆனால், ஏனைய சமயத் தலைவர்கள் ஹெல்மெட் இன்றி சென்றால் அவர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.
6. சமய உரிமை சட்டங்களை நீக்க வேண்டும் என்று கருதினால்
முதலில் பாதிக்கப்பட போவது பௌத்த சமயத் தலைவர்கள்தான். நீதிமன்றங்கள், பேரூந்துகளில் மத தலைவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களை பாவிப்பது எமது சகோதர பௌத்த மத தலைவர்களே. எனவே, சமயத்தலைவருக்கும், பொது மகனுக்கும் ஒரே சட்டம் என்று வந்தால் இவ்வாறான இடங்கள் அகற்றப்பட வேண்டிவரும்.
7. அதே போல் காணி, வீடு போன்ற சிவில் சட்டங்களும் ஒரே சட்டமாகவே உள்ளன.
8. சமய ரீதியிலான சட்டங்களும், அரசியல் யாப்பு சட்டம் என்ற ஒரே சட்டத்தின் கீழேயே உள்ளன.
ஆகவே நாட்டின் அரசியல் யாப்பின் வழங்கப்பட்டுள்ள சட்டத்தை அப்படியே அமுல் படுத்துவதும் அதனை ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை என்ற பேதம் இல்லாது பொலிசாரும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுப்பது விடயத்தில் தாங்கள் கவனம் செலுத்தினால் அது இந்த நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களால் போற்றப்படும் ஒன்றாக இருக்கும் என்பதை முஸ்லிம் உலமா கட்சி (ஐக்கிய காங்கிரஸ்) மிகவும் வினயமாக சொல்லிக்கொள்கிறது.

ஏ.எல்.எம்.சலீம்