
posted 23rd November 2021
வடமராட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம் கே சிவாஜிலிங்கம், மாகாணசபை தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், மற்றும் எஸ் பாலசிங்கம் ஆகியோர்களுக்கு பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி, ஆகிய பொலிஸ் நிலையங்களினால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றையதினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை போலீசாரால் எம் கே சிவாஜிலிங்கத்திற்கு ஏதிராகவும், பருத்தித்துறை போலீசாரால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம் .கே.சிவாஜிலிங்கம், மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண சபை முதல்வர் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பம் கடந்த வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் பெயர் குறிப்பிட பட்டவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு மன்றினால் அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் காலை 11 மணியளவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு சில மணி நேர போலீஸார் மற்றும் மூத்த சட்டத்தரணி என். சிறிகாந்தா, மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன், உட்பட்ட சட்டத்தரணிகளது சமர்ப்பணங்களைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிற்பகல் 4 மணியளவில் கூடிய நீதிம்ன்றம் பருத்தித்துறை நெல்லியடி மற்றும் வல்வெட்டித் துறை போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதனை நிராகரிப்பதாகவும், சட்டங்களை மீறி செயற்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் போலசாருக்கு உண்டு என்றும் கௌரவ நீதிபதி கிருசாந்தன் அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்

எஸ் தில்லைநாதன்