
posted 13th November 2021
“நாட்டில் மத்தியஸ்த சபைகளின் சேவைகள் பாராட்டத்தக்கவையாக அமைந்துள்ளன. இந்த நிலையை தொடர நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்”. இவ்வாறு நிந்தவூர் மத்தியஸ்த சபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியையுமான பல்கீஸ் அப்துல் மஜீத் கூறினார்.
நிந்தவூர் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சபை அமர்வுகள் இடம் பெறும் நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலய மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீத் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் ஸ்தாபிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் இயங்கும் மத்தியஸ்த சபைகள், அதன் ஸ்தாபிக்கப்பட்ட நோக்கில் சிறப்புற இயங்கி வருகின்றன.
சமூகத்தில் மக்களிடையே ஏற்படும் பிணக்குகளை சமரசம் செய்து வைப்பதில் இச் சபைகள் வெற்றிகண்டு வருகின்றன.
இப்பணியை செவ்வனே முன்னெடுத்துவரும் மத்தியஸ்தர்களின் சேவைகள் பாராட்டத் தக்கவையாகும்.
அதேவேளை சமூகத்தில் முக்கியத்துவம் பெறும் மத்தியஸ்த்த சபை உறுப்பினர்களான மத்தியஸ்த்தர்கள் முன்னுதாரணமானவர்களாகவும் திகழ வேண்டும்” என்றார்.
பிரதி தவிசாளர் யூ.எல்.ஏ.முபாரக்கும் உரையாற்றினார்.

எ.எல்.எம்.சலீம்