
posted 20th November 2021
“எத்தகைய சந்தரப்பத்திலும் எனது சுய நலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை அடகு வைப்பதற்கு நான் தயாரில்லை எனது விடுதாலை தொடர்பிலோ, வேறு சுய இலாபங்களுக்காகவோ இன்றைய அரசுடன் நாம் மறைமுகடீல் கொண்டிருப்பதாக வெறும் புரளியே கிளப்பப்பப்பட்டுள்ளது”
இவ்வாறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் திடமாகக் கூறினார்.
அம்பாறை மாவட்டத்திற்கு வருகை சந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிந்தவூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளருமான எம்.ஏ.எம்.அஷ்ரப் தாஹிர் தலைமையில், அவரது இல்ல திறந்த வெளி அரங்கில் இந்த மக்கள் சந்திப்பு நிழ்வு நடைபெற்றது.
வெள்ளி இரவு நிகழ்வுக்கு வருகைதந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட், நிந்தவூர் ஜும்ஆப்பள்ளி வாசல் முன்றலிலிருந்து மோட்டார் சைக்கிள் பவனியாக மக்கள் சந்திப்பு இடம்பெற்ற இடம் வரை அழைத்துச் செல்லப்பட்டதுடன்,
பெருந்தொகையான இளைஞர்கள், பொது மகக்ள், பெண்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இதன் போது தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“சுதந்திரத்திற்குப்பின் வந்த எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது மக்கள் பிரதி நிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கோ இழைக்கப்படாத பெரும் அநீதி எனது கைது மூலம் எனக்கு இழைக்கப்பட்டது.
அநியாயமான முறையில் ஆறுமாதகாலம் என்னை சிறையிலடைத்து இழைக்கப்பட்ட கொடுமை என்றும் மாறாதகறைபடிந்த வரலாறாகும்.
ஒரு சிறுதவறும் செய்யாமல் வஞ்சிக்கப்பட்ட எனது மனைவி மற்றும் குடும்பத்தினரும் கூடதுன்புறுத்தலுக்குட்பட்டசோக வரலாற்றை நாடே அறியும்.
நீதி, நியாயமற்ற எனது கைது விவகாரம் எவரைத்திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதோ தெரியாது.
இந்த நாட்டை ஆண்ட அமரர் பிரேமதாஸ, சந்திரிகா பண்டார நாயக்க, டி.பி.விஜேதுங்க, மைத்திரிபால சிரிசேன போன்றவர்கள் ஆட்சிக்காலத்தில் எனது கைது போன்ற இலக்கு வைக்கப்பட்ட எந்த சம்பவமும் இடம்பெறவில்லை.
விடுதலையின் பின்னணி
எனது விடுதலையின் பின்னணியில் இன்றைய அரசுடனான “டீல்” இருப்பதாக (மறைமுக ஒப்பந்தம்) சிலர் புரளி கிளப்புவதாக அறிய முடிகின்றது.
அத்தகைய எந்த உடன்பாட்டுடனும் நான் பிணையில் விடுதலை செய்யப்படவுமில்லை, எந்த நபரும் இதற்கு உதவவுமில்லை, சட்ட ரீதியாகவே எனக்கு விடுதலை கிடைத்துள்ளது.
சிறையிலிருந்தவாறு நான் பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சமயம், அங்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், அரசுடன் பேசுவதுபற்றி கேட்டனர்.
நான் பேசவே வேண்டாமெனக்கூறி என் விடுதலைக்காகப் பிரார்த்தியுங்கள் என்றே கூறினேன்.
என்னைப் பொறுத்தவரை எனது சுய இலாபத்திற்காகச் சமூகத்தைக் காட்டிக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ ஒருபோதும் நான் தயாரில்லை.
திட்டமிட்டு செய்யப்படும் எத்தகைய அநியாயங்களையும் எதிர்கொண்டு அதனை தைரியத்தோடு எதிர்த்து செயற்படுவேனேதவிர, என்னையும், கட்சியையும் நம்பிய மக்களை பகடைக்காய்களாக்கி துரோக மிழைக்க மாட்டேன்.
நாடு இன்று பெரும்களேபர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில் பல ஆர்ப்பாட்டங்கள், நெருக்கடிக்கள் உக்கிர மடைந்துள்ள நிலையிலும்,
ஏன் இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த 69 லட்சம் மக்களும் எதிராக வீதிக்கு இறங்கியுள்ள நிலையிலும், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்த ஒரே நாடு ஒரெ சட்டம் ஆணைக்குழு விவகாரத்தை இந்த அரசு முன்னெடுத்துள்தென்றால் அதன் கோர முகம் எத்தகையது என்பது புரியாமலில்லை.
எனது சமூகத்தை நோக்கி எத்தகைய அநீதிகள் கட்டவிழ்த்து விடப்படினும்; நானும், கட்சியும் அவற்றை எதிர்த்துப் போராட ஒருபோதும் தயங்கும் நிலை துளியும் ஏற்படாது என்பதை கட்சிப் போராளாகளுக்கும் மக்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் உறுதிப்படக் கூறுகின்றேன்” என்றார்.
தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட மற்றும் சிலரும் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம்