
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
விஸ்தரிப்பிற்கான நிதி ஒதுக்கீடு - ஹரீஸ் எம்.பி
கிழக்கு மாகாணத்தின் மூத்த குர்ஆன் கலாபீடங்களில் ஒன்றான சம்மாந்துறை தப்லிக்குல் இஸ்லாம் அரபுக்கல்லூரி விஸ்தரிப்புக்கு வேலைத் திட்டங்களுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணங்கள் அரபுக்கல்லூரி நிர்வாகத்தின் பிரதித்தலைவரும், கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான வரலாற்றில் ஒரு ஏடு புகழ் மௌலவி ஏ.சி.ஏ. புஹாரி (கபூரி) தலைமையிலான நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது.
முஸ்லிங்களின் பிரச்சினைகள், தேவைகள் படர்ந்து காணப்படும் சூழலில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் எல்லோரும் பேதங்கள் துறந்து ஒற்றுமைப்பட்டு ஒருமித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் பொதுவேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது தொடர்பில் சிந்தித்து கொண்டிருக்கும் தருவாயில் முஸ்லிம் சமூகமும் தனது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது தொடர்பில் தூரநோக்குடன் சிந்திக்க வேண்டும். அண்மையில் பாராளுமன்றத்தில் ஹரிஸ் எம்.பியவர்களின் துணிச்சலான, நிதர்சனமான பேச்சைக் கேட்டோம். இது போன்று பல சந்தர்ப்பங்களில் அவர் முஸ்லிங்களின் குரலாக ஒலித்துள்ளார்.
உரலுக்கு ஒரு பக்கம் இடி, மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல முஸ்லிங்களுக்கும் எல்லாப்பக்கமும் இடியாகவே இருக்கிறது. இந்த துன்பங்களிலிருந்து மீள சகல முஸ்லிம் கட்சிகளும் ஒருமித்த குரலில் ஜனாதிபதியை சந்தித்து பேச வேண்டும். எமது சமூகம் தைரியமாக பேசக்கூடிய தலைவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது என மூத்த உலமா ஏ.சி.ஏ. புஹாரி (கபூரி) இந்த நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், சமயக்கல்வி கற்கும் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் மதரஸா மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கையைத் தான் எடுக்கவுள்ளதாகவும், மறைந்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலும், நானும் இரட்டை குழல் துப்பாக்கி போன்று செயற்பட்டவர்கள். அவரின் வெற்றிடத்தை நிரப்பத் தன்னால் முடியுமான சகல உதவிகளையும் எந்த சந்தர்ப்பத்திலும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறை கிளைத் தலைவர் மௌலவி எம்.எல்.எம். பஷீர் (மதனி), தப்லிக்குல் இஸ்லாம் அரபுக்கல்லூரி செயலாளர் மௌலவி ஏ.கே. அப்துல் சக்கூர் (தப்லீகி), தப்லிக்குல் இஸ்லாம் அரபுக்கல்லூரி பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் ஏ. கலீலுர் ரஹ்மான், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)