
posted 4th May 2024
யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் கலை சங்கமம் - இசை, நடன விழா

தமிழ்நாட்டில் புகழ் பெற்ற பிரிட்ஜ் அக்கடமியின் இலங்கை கிளை நடத்திய கலை சங்கமம் - இசை, நடன விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் சிறப்புற நடைபெற்றது.
ஏறத்தாழ 10 மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த ஆற்றுகை நிகழ்வில் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு கண்டி, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வருகை தந்து பங்கேற்றனர். இசை, நடனம் என 17 ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழகத்தில் இருந்து பிரிட்ஜ் அக்கடமியின் நிறுவுநர் மற்றும் தலைவர் நரசிம்மன் ரகுராமன், இசைத்துறை தலைவர் முனைவர் என். சாரதா, பரதநாட்டியத்துறைத் தலைவர் முனைவர் எஸ். சுமதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதம விருந்தினர்களாக இந்தியத் துணைத்தூதர் சாய்முரளி, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், பதில் அரசஅதிபர் ம. பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினர்களாக மூத்த சங்கீத வித்துவான் பொன். சிறீவாமதேவன், கலைஞர் வேல் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் வலிகாம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சிறீதேவி கண்ணதாசன் யாழ். கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் அகல்யா ராஜபாரதி தென்மராட்சி கல்வி வலய அழகியல் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் விஜிதா சுனில் ஆரியரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இருந்து 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் மட்டக்களப்பில் இருந்து 150 இற்கும் மேற்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஆற்றுகைகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தன. நேரக்கட்டுப்பாட்டுடன் அரங்காற்றுகை செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளை ஆரணி மற்றும் மொறாயஸ் ஆகிய பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் நேர்த்தியாக தொகுத்து வழங்கினர்.
பிரிட்ஜ் அக்கடமி எங்கள் மண்ணில் உள்ள சங்கீத சபை போன்ற ஓர் அமைப்பு. பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஊடாக அவர்களின் பாடத்திட்டத்தை அமுலாக்கி தர நிலைகளுக்கான பரீட்சைகளை நடத்துகின்றது. இதன் இலங்கை இணைப்பாளராக விளங்குபவர் துரைரட்ணம் சிறீ சுடரோன்.
நுண்கலைத் துறைசார்ந்து தமிழகப் பல்கலைக்ககழகங்களில் உயர் பட்டப்படிப்புகளுக்கான ஏற்பாடுகளையும் பிரிட்ஜ் அக்கடமியினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல பாகங்கள் தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், டுபாய் போன்ற இடங்களிலும் அதன் கிளைகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)