
posted 20th May 2024
மக்களை ஏமாற்றும் கருத்து
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கட்சி யாரை ஆதரிப்பது என இன்னும் முடிவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஹிஸ்புள்ளாஹ் சொல்லியுள்ளமை முஸ்லிம் காங்கிரசின் வழமையான மக்களை ஏமாற்றும் கருத்தாகும் என ஸ்ரீலங்கா உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது பற்றி அக்கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளதாவது,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்னும் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்றும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆராய்ந்து யாருக்கு தமது ஆதரவை வழங்குவது என்று கட்சி முடிவெடுக்கும் என்றும் ஹிஸ்புள்ளா தெரிவித்துள்ளமை புதிய கருத்தல்ல, மாறாக இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் கூறி தமக்கான சுயநலன்களை அடைந்து கொள்வது என்பது வழமையான ஒன்றாகும்.
முன்னர் ஐ. தே. கவுடன் மு. கா இருந்த போதும் இவ்வாறு அறிக்கைவிட்டுவிட்டு பின்னர் ஐ தே க மற்றும் தமிழ் கூட்டமைப்பு கை காட்டும் வேட்பாளருக்கே ஆதரவளித்தது.
2015ம் ஆண்டு தபால் மூல வாக்களிப்பும் முடிந்த பின் சந்திரிக்காவிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு மைத்திரி சாய்ந்து கதைத்ததாக ஆஸாத் சாலி குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல் 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என கட்சி முடிவு செய்திருந்த போதும் தமிழ் கூட்டமைப்பின் வேண்டுதலுக்கிணங்க ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்ததாக எச் எம் எம் ஹரீஸ் பகிரங்கமாக சொல்லியிருந்தார்.
அதே போல் 2010 தேர்தலில் தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து பொன்சேக்காவை ஆதரித்தார்.
ஜனாதிபதி தேர்தல் வந்தால் மு. கா. உறுப்பினர்கள் ஆளுக்கொரு கருத்தை சொல்வதும் பின்னர் தமிழ் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கிறதோ அல்லது யார் பணம் தருகிறார்களோ அவரை ஆதரிப்பதும் தேர்தல் முடிந்ததும் வென்றவர் காலில் மண்டியிடுவதும் முஸ்லிம் காங்கிரசின் வழமையான அரசியலாகிவிட்டது.
முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக்கட்சி என்றும் ரவூப் ஹக்கீம் எத்தகைய டீலர் என்பதும் நன்கு தெரிந்து வைத்துள்ள ஹிஸ்புள்ளா, அடுத்த பொது தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் வெல்வதற்காகவே மு. காவில் மீண்டும் சேர்ந்தார் என்பது வெள்ளிடை மலை.
ஆகவே ஹிஸ்புள்ளா தன்னுடைய அந்தக் குறிக்கோளை அடைய வேலை செய்யட்டுமே தவிர முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்றுக்களுக்கு அடிபணிந்து முஸ்லிம்களை ஏமாற்றும் வார்த்தைகளை பேச வேண்டாம் என உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)