
posted 29th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மத்ரஸா மாணவன் மர்ம மரணம்; அதிபரின் விளக்கமறியல் நீடிப்பு
சாய்ந்தமருது அல்குர்ஆன் மத்ரஸா ஒன்றில் மாணவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அதன் அதிபரை எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே அவர் இக்கட்டளையை பிறப்பித்துள்ளார்.
இதன்போது சம்பவ தினத்தன்று அங்குள்ள சி.சி.ரி.வி. கமராவில் பதிவான காட்சிகளை மேற்படி அதிபரின் வேண்டுதலின் பேரில் அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட 04 தொழில்நுட்ப செயற்பாட்டாளர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
சாய்ந்தமருது சந்தை வீதியில் இயங்கி வந்த அல்குர்ஆன் மத்ரஸாவில் கல்வி கற்று வந்த காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் எனும் 13 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் தொடர்பிலேயே அந்த மத்ரஸா அதிபர் அன்றைய தினமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக விளக்கமறியலில் இருந்து வருகிறார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)