
posted 24th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மட்டக்களப்பு மருத்துவ வரலாற்றில் சாதனை

மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க. கலாரஞ்சினி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன், குழந்தை நல வைத்திய நிபுணர் ரி. மதன் ஆகியோர் இங்கு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் திருமதி பெ. மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரு சூலில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில் இயற்கையாக கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்தானது மருத்துவத்துறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார்.
பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் இவ்வாறான அரிதான பிறப்பாக கருதுவதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் க. கலாரஞ்சினி தெரிவித்தார்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)