
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
புலம்பெயர் தமிழர் நிறுவனத்திற்கெதிராக மீனவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு சிலாவத்தை தியோகுநகர் மீனவர்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வந்த தொழிலுக்காக கடற்கரைக்கு சென்றுவரும் வீதியை அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை அமைத்துவரும் கனேடிய புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான தனியார் நிறுவனம் ஒன்று அடத்தாக நேற்று முன்தினம் (26) ஞாயிறு வேலி போட்டு மூடி உள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மீனவர்கள் தாம் கடல் தொழிலுக்காக பல ஆண்டுகளாகப் பயன்படுத்திவரும் பாவனையில் உள்ள வீதியை மூடி அடைத்த தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தில் குதித்துள்ளதோடு வீதியை மூடி அடைக்கப்பட்ட வேலியையும் உடைத்து எறிந்தனர்.
இதனையடுத்து தனியார் நிறுவனத்தால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதிக்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் மீனவர்களிடம் விசாரணை மேற்கொண்டதோடு நேற்று மீனவர்களில் ஐந்து பேரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகைதருமாறு அழைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு சென்ற முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மீனவர்களோடு கலந்துரையாடி நிலைமைகளை நேரில் பார்வையிட்டார் .
இந்த தனியார் நிறுவனம், தம்முடன் முரண்பாடுகளை ஏற்படுத்துவதோடு மீனவர்களின் தொழிலுக்கும் இடையூறுகளை ஏற்படுத்தி அடாவடியில் ஈடுபட்டு வருவதாக முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் உள்ள தியோகுநகர் பகுதி மீனவர்கள் குற்றம்சாட்டினர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)