
posted 6th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
தாய் மர்ம மரணம் - 16 வயது மகன் மாயம்
மர்மமாக உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது. இதேநேரம், அவரின் 16 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட மகனையும் காணவில்லை என்று தெரியவந்துள்ளது.
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் (04) இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
கணவன் வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் தெல்லிப்பழையில் வசித்து வந்தனர். 16 வயதான மகன் மனநல சிக்கலுக்கு உள்ளானவர் என்று கூறப்படுகின்றது.
இந்த நிலையில், சிறுவன் தனது கழுத்தில் கத்தி ஒன்றை வைத்திருந்தார் என்றும் இதை அவதானித்த அவரின் சகோதரி அயல் வீட்டில் சென்று உறங்கினார் என்றும் காலையில் வீட்டுக்கு திரும்பியபோது வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.
எனினும், தாயாரின் உடலில் இரத்தக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் அவரின் வாயிலிருந்து குருதி வெளியேறி காணப்பட்டதாகவும் உடலின் அருகே தற்கொலை செய்வதாக எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டதாகவும் தெரிய வருகுின்றது.
இதேவேளை, வீட்டு சுவரில் இரத்தத்தால் சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன.
இதேநேரம், வீட்டிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனையும் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)