
posted 15th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர்
எமது மக்களுக்கு நிகழ்ந்தவற்றை அவர்கள் நினைவு கூர்ந்து அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லையென்றால் எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தலைவர்கள் இங்கு வரவேண்டாம் என்பதை சொல்லிவைக்க விரும்புகிறோம். இவ்வாறு தமிழரசுக் கட்சியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (13) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இக் கருத்தினைத் தெரிவித்தார். அவ்வேளை அவர் மேலும் தெரிவித்ததாவது;
"திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சும் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸார் நீதிமன்றக் கட்டளை ஊடாகத் தடுத்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.
நினைவேந்தல்கள் உலக நியமங்களிலே மிக முக்கியமானவை. ஆகவே, இதனைத் தடுக்கின்றவர்கள் மிக மோசமான செயல்களில் ஈடுபடுகினர்கள். ஜனாதிபதி ரணிலுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகின்றோம். அதாவது உங்களது கட்டளையின் பெயரிலோ அல்லது உங்கள் அமைச்சர்களின் கட்டளையின் பெயரிலோ நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கின்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுமாக இருந்தால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில் எமது மக்களிடம் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம். மற்றைய தலைவர்களிடத்திலேயும் நாங்கள் இதனைச் சொல்ல விரும்புகின்றோம்.
Presidential Candidate Press Conference - Suminthiran - 2024 | Thaenaaram News |
எமது மக்கள் தமக்கு நிகழ்ந்தவற்றை அனுஷ்டிப்பதை அங்கீகரிக்கவில்லை என்றால் இங்கே எமது மக்களின் வாக்குகளைக் கேட்டு வரவேண்டாம் என்பதையும் நாங்கள் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.
இது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகின்றோம் என்று கூறுபவர்களுக்கு ஆதரவாகக் கூறும் செய்தியல்ல. அது வேறு விடயம். அது சம்பந்தமாக எமது கட்சி (இலங்கைத் தமிழரசுக் கட்சி) எதிர்வரும் 19ஆம் திகதி கூடி சரியாக ஆராய்ந்து ஒரு தீர்மானத்தை எடுக்கும்.
ஆகவே, அது சம்பந்தமான வேறு விடயங்களை நான் தெரிவிக்க விரும்பவில்லை. ஏற்கனவே எமது கட்சியின் பெருந்தலைவர் (இரா. சம்பந்தன்) தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவை எடுத்துவிட வேண்டாம் என்றும் அறிவித்திருக்கின்றார். அதற்கு முன்னரும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு பொருத்தமற்ற நடவடிக்கை என்று எமது கட்சியின் பெருந்தலைவர் அறிவித்திருக்கின்றார். நாங்கள் அவருடைய கருத்தையும் ஏனையோருடைய கருத்தையும் சீராக ஆராய்ந்து பொருத்தமான முடிவுக்கு வருவோம்." என்றார்.
கேள்வி:
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் வடக்கு, கிழக்கில் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் கலந்துரையாடி வருகின்றன. இதற்கான பொது வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரனை நிறுத்தலாம் என்று பேச்சு எழுந்துள்ளது. அது உண்மையா? உங்களிடம் இது பற்றி கேட்கப்பட்டதா?
பதில்:
"ஆம். உத்தியோகபூர்வமாக அனைவரும் இணைந்து வந்து கோரிக்கையை முன்வைக்கவில்லை. ஆனால், இந்தப் பேச்சு எழுந்த வேளையிலே சுரேஷ் பிரேமச்சந்திரன் என்னிடம் ஒரு தடவை கேட்டிருந்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பொருத்தமானவர் நீங்கள்தான் என்றும், ஒரு சிலரால் இது குறித்து பகிரப்பட்டது என்றும், அது குறித்து எனது நிலைப்பாடு என்ன என்றும் என்னிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். நான் அப்போதே எனது நிலைப்பாட்டைச் சொல்லியிருந்தேன்.
அப்படியாகத் தமிழ் பொது வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிடமாட்டேன். ஜனாதிபதியாக வருவதற்கு ஜனாதிபதி வேட்பாளராக, ஜனாதிபதி பொது வேட்பாளராக, ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக என்னைக் களமிறங்கச் சொன்னால் அது வேறு விடயம்.
இந்த நாட்டிலே எந்தச் சமூகத்தவரும், எந்தச் சமயத்தவரும், எந்த மொழியைப் பேசுபவர்களும் ஜனாதிபதியாக வர முடியும். அதற்குப் போட்டியிட முடியும். ஆகையினாலே அப்படியான சூழ்நிலையிலே நான் மட்டுமல்ல வேறு யாராவதும் போட்டியிட அழைக்கப்பட்டால் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.
ஆனால், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்கு, ஜனாதிபதித் தேர்தலிலே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த அபிலாஷைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்கும் எனக்கும் இணக்கம் இல்லை" என்றார்.
இந்த ஊடவியலாளர்களுடனான சுமிந்திரனின் சந்திப்பில் - தமிழ் மக்களின் அபிலாசைகள் என்ன? அதனை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்த வேண்டுமா? மக்களின் இந்தக் கருத்தின் நிலைப்பாடுகள் என்ன? மக்களின் கருத்துக்களை மக்களின் பிரதிநிதிகள் செவிசாய்ப்பார்களா? சிலரின் விஷப் பரீட்சைகளுக்கான முயற்சிகளினை மீண்டும் மக்கள் பிரதிநிதிகள் பரிசீலிப்பார்களா? என்ற பலவிதமான கேள்விகளுக்குரிய பதிலுடன் வருகின்றது இந்தக் காணொலி. பாருங்கள் - உங்கள் கருத்தினை எம்முடன் பகிருங்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)