
posted 27th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
சிங்கள தலைவர்களின் இன மேலாதிக்க மனோநிலைக்கு ரணிலும் விலக்கல்லர்
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை அதிகாரபூர்வமாக வழங்குவதற்கான சந்தர்ப்பங்களை தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களுக்கு பல முறை வழங்கியிருந்தனர். ஆனால், அவற்றை அவர்கள் சரிவரப் பயன்படுத்தாமைக்கு இனமேலாதிக்க மனோநிலையே காரணம். இதற்கு ரணிலும் விதிவிலக்கல்லர். இவ்வாறு இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை தமிழ் கட்சிகள் நிறுத்துவது சாத்தியமில்லை என்று விக்னேஸ்வரன் எம். பியிடம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று (26) ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி - கௌதாரிமுனையில் நடத்திய மக்கள் சந்திப்பில் சிறீதரன் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் எவரும் தயாரில்லை. சிங்களத் தலைவர்கள் ஈழத் தமிழர்களை எடுப்பார் கைப்பிள்ளைகளாக பயன்படுத்த நினைக்கும் மனோநிலையிலிருந்து வெளிவராத வரை இந்த நாட்டில் இன நல்லிணக்கம், சமத்துவம், சகோதரத்துவம் என்பவை சாத்தியமே இல்லை என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)