சர்வதேச விசாரணையே எங்களுக்கு வேண்டும்

சர்வதேச விசாரணையே எங்களுக்கு வேண்டும்

போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை சிங்கள அரசு தருவார்கள் என்பதில் நம்பிக்கை இல்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணையே தேவை. இவ்வாறு மன்னார் மாவட்டத்தில் நேற்று (30) வியாழக்கிழயம போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட செயலகம் முன்பாக நேற்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்ற போராட்டத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியாவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு கருத்து வெளியிட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயசந்திரா,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி 15 வருடங்களாக நாம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வை வழங்கவில்லை. உறவுகளைத் தொலைத்த எமக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் கலப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் மீது எமக்கு நம்பிக்கை இல்லை. இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் தொடர்பில் எதையும் செய்யமாட்டார்கள். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என்றார்.

இதேநேரம், நேற்றைய தினம் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணையே எங்களுக்கு வேண்டும்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)