
posted 30th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கார்த்திகை பூ பொறிக்கப்பட்ட செருப்பை மீளப்பெற வேண்டும்
கார்த்திகைப் பூ வெறும் பூ அல்ல, தமிழ் மக்களின் வாழ்வியலிலும் உணர்வுகளிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் இரண்டறக் கலந்துள்ள அவர்களின் உயிர்ப் பூ.
தென்னிலங்கை நிறுவனமான டி .எஸ்.ஐ. பாதணி உற்பத்தி நிறுவனத்துக்கு இதுபற்றி தெரியாததொன்றல்ல. ஆனாலும், தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டிப்பார்க்கும் விதத்தில் இந்த நிறுவனம் தனது இலேசுரக கால் செருப்புகளில் கார்த்திகைப் பூவைப் பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளது.
இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதொன்றாகும்.
டி.எஸ்.ஐ. நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப்பெறவேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியமைக்காக வருத்தமும் தெரிவிப்பதுமட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமை பணிமனையில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் புத்தபெருமானின் உருவத்தை உடலில் பச்சை குத்தியவர்களும், பெளத்த சின்னங்கள் அச்சிட்ட ஆடைகளை அணிந்தவர்களும் பெளத்தத்தை அவமதித்தனர், பௌத்த மதத்தினரின் மனதை புண்படுத்தினரெனக் கூறி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கார்த்திகைப் பூவும் புனிதமான ஒன்றாக அவர்களின் தேசிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இதனால், கார்த்திகைப் பூவைக் கால்செருப்பில் பொறித்திருப்பதைத் தங்களை இழிவுபடுத்தும் ஒன்றாகவே தமிழ் மக்கள் கருதுகின்றார்கள். எனவே எமது மக்களின் மன உணர்வைப் புரிந்துகொண்டு டி .எஸ்.ஐ. நிறுவனம் உடனடியாக இந்த கால் செருப்புகளை சந்தையில் இருந்து மீளப்பெறல் வேண்டும்.
டி. எஸ். ஐ. நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட கால் செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப்பெறும் வரைக்கும், இந்த அநாகரிக இழிசெயலுக்காக தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்கும் வரைக்கும் தமிழ் மக்கள் டி.எஸ்.ஐ. நிறுவனத்தின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்யாது புறக்கணிக்கவேண்டும் என்றும் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)