
posted 12th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சகல கட்சிகளும் இணைந்து சதி
நாட்டிலுள்ள பிரதான கட்சிகள் பலவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியைக் கண்டு அஞ்சுகின்றன. எனவே, அவை அனைத்தும் ஒன்றிணைந்து சதித்திட்டம் தீட்டுகின்றன. ஆனால், எந்தவொரு சதித்திட்டத்துக்கும் மக்கள் ஏமாறப் போவதில்லை. இவ்வாறு கூறியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நடத்தப்பட்ட அம்பாறை மாவட்ட விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு இறுதியில் பொது மக்கள் யுகம் உருவாகும். எம்மைப் பற்றி சிந்தித்து அனைவரும் அச்சமடைந்துள்ளனர். மொட்டு, யானை, திசைக்காட்டி என அனைவரும் எம்மைக் கண்டு அஞ்சுவதால் அவர்கள் அனைவரும் இணைந்து எமக்கெதிராக சதித்திட்டம் தீட்டுகின்றனர். எந்தவொரு சதித்திட்டத்தாலும் 220 இலட்சம் மக்களை ஏமாற்ற முடியாது.
அதிகாரம் எதுவுமின்றி பல சேவைகளை நாட்டுக்கு செய்யும் ஒரேயோர் எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே. இதேபோன்று தற்போது வழங்கும் சகல வாக்குறுதிகளையும் எமது ஆட்சியில் நிச்சயம் நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கின்றேன். புதிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தை அடுத்த மட்டத்துக்கு எடுத்துச் செல்வோம்.
விவசாயிகளின் பயிர்செய்கைக்கான உறுதியான விலை நிர்ணயிக்கப்படும். அதேபோன்று விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையையும் நாம் மறக்கவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் விவசாயிகளுக்கான ஓய்வூதிய முறைமையை நடைமுறைப்படுத்துவோம். யானை - மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்படும். விவசாயிகளின் விவசாய நிலத்துக்கான உரிமம் வழங்கப்படும்.
சஜித் பிரேமதாஸ எந்தவொரு நாட்டுக்கும் அடிபணிய மாட்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோன்று வர்த்தக நிறுவனங்களால் என்னை விலைக்கு வாங்கவும் முடியாது. எமது மக்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)