
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
எல்லையற்ற செயலகம் அமைவதை அனுமதிக்கமுடியாது
கல்முனையில் இயங்கும் தமிழ் மக்களுக்கான உப பிரதேச செயலகத்தை மூட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நானில்லை. கல்முனையை நான்காக உடைத்து அவர்களுக்கு தனிப் பிரதேச செயலகம் வழங்குவதற்கும் நான் தயாராக உள்ளேன். எனினும் சில முஸ்லிம் பகுதிகளையும் உள்ளடக்கியதாக தீர்க்கமான எல்லைகள் இன்றி நிலத் தொடர்பற்ற பிரதேச செயலகம் உருவாக்கப்படுவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் அவர் நடாத்திய செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
எந்தவொரு நாட்டுத் தலைமையும் தனது நாடு துண்டாடப்படுவதை விரும்பாது. இலங்கையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிந்து போவதை இந்நாட்டு மக்கள் விரும்பவில்லை. கொழும்பில் தமக்கென தனியான பிரதேச செயலகத்தை தமிழர்கள் கோரவில்லை. ஆனால், கல்முனையில் தனிச் செயலகம் கோரி போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.
யுத்த காலத்தில் ஒரு சூழ்ச்சியின் அடிப்படையில கல்முனையில் ஓர் உப செயலகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதனை மூடி விட வேண்டும் என்று தீவிரப் போக்குடைய சில முஸ்லிம்கள் வற்புறுத்தி வருகின்றனர். அது போன்றே உப செயலகம் முழுமையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்று தீவிரப் போக்குடைய சில தமிழர்களே கோரி வருகின்றனர். இதனால் இங்கு தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
என்னைப் பொறுத்தளவில் கல்முனை உப செயலகம் மூடப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு கிடையாது என்பதை தைரியமாக கூறுகின்றேன். கல்முனை என்பது வடக்கு, கிழக்கின் ஐக்கிய பூமியாகும். இங்கு அனைத்து மதத்தினரும் வாழ்கின்றனர். கொர்ப்பசேவ் சோவியத் ரஷ்யாவை 15 நாடுகளாகப் உடைத்தது போன்று அமைதி, சமாதானத்தைக் கருத்தில் கொண்டு கல்முனையை நான்காக உடைப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். கல்முனையின் அரசியல் தலைமையாக பொறுப்புடன் இதனைக் கூறுகின்றேன்.
இதன் மூலம் சாய்ந்தமருது, மருதமுனை மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தனித்தனியான அலகுகள் உருவாக்கப்படும். இதன்போது தமிழர்களுக்கான செயலகம் தெளிவான எல்லைகளுடன் நிலத் தொடர்புடையதாக அமைக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். இவ்வாறான தீர்வுக்கு சம்பந்தன் ஐயா உள்ளிட்ட தமிழ் தலைமைகள் தயாரா என்று கேட்க விரும்புகின்றேன். இந்த விடயத்தில் பூகோள யதார்த்தங்களை தமிழ் தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும்.
தீர்க்கமான எல்லைகள் இன்றி நிலத் தொடர்பின்றி முஸ்லிம் பகுதிகளையும் உள்ளடக்கியதாக தமிழ் மக்களுக்கான செயலகம் கோரப்படுவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறேன். இதனை ஒருபோதும் நான் அனுமதிக்கப் போவதில்லை.
இவ்விவகாரம் சம்மந்தமாக முன்னர் பல தடவைகள் முஸ்லிம் தலைமைகளும் தமிழ் தலைமைகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்றன. அப்போது 52 வீதம் முஸ்லிம்களைக் கொண்ட இரட்டை வட்டாரமான 12 ஆம் வட்டாரத்தை எமக்கு விட்டுத் தந்து விட்டு, எல்லைகளை வரையறுத்து தமிழர்களுக்கான செயலகத்தை தரமுயர்த்துவோம் என்று கோரினோம். அதற்கு சம்பந்தன் ஐயா மறுத்து விட்டார். அதோடு பேச்சுவார்த்தைகள் முறிந்துவிட்டன. இப்போது இவ்விவகாரம் நீதிமன்றத்தில் வழக்கிடப்பட்டு, விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எம்மால் ஊடகங்களுக்கு எதையும் பேச முடியாது என்றார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)