
posted 19th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இறுதிப்போரில் படுகொலையானோரை நேற்று முள்ளிவாய்க்காலில் நினைவு கூரல்

இறுதிப் போரில் கொத்துக் கொத்தாக தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் பதினைந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டு கதறியழ நடந்தது.
தமிழினப் படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்றுக்காலை 10: 30 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் கலந்து கொண்டதோடு முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
மணி ஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பினால் நினைவுப் பேருரை ஆற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் யுத்தத்திலே கணவனை இழந்த முள்ளியவளையைச் சேர்ந்த கோவிந்தராசன் புனிதவதி பொதுச்சுடரினை ஏற்றி வைக்க ஏனைய உறவுகளும் தங்களுடைய உயிரிழந்த உறவுகளை நினைத்து சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக மலர் அஞ்சலி செலுத்தினர்.
Galleryயில் உள்ள படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பாருங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)