
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இணைகிறார் றிஸ்லி முஸ்தபா
கிழக்கிலங்கையின் சிரேஷ்ட முஸ்லிம் அரசியல் வாதியும், முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சருமான காலஞ்சென்ற மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் புதல்வரும், சமூக செயற்பாட்டாளருமான றிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கொள்கின்றார்.
பாமர மக்களின் உற்ற தோழனாகவும், அரசியல் நம்பிக்கை நட்சத்திரமாகவும் திகழ்ந்த சிரேஷ்ட அரசியல்வாதியான தமது தந்தை மயோன் முஸ்தபாவின் வழியே அரசியலில்புகும் நோக்குடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் றிஸ்லி முஸ்தபா இணைந்து பயணிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
இதனடிப்படையில், இளம் சமூக அரசியல் செயற்பாட்டாளரான றிஸ்லி முஸ்தபா, அகில இலங்கை மக்கள் சாங்கிரசுடன் இணைந்து கொள்ளும் சிறப்பு விழா ஒன்று சாய்ந்தமருது பாவா நோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற விருக்கின்றது.
தென் கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும் (தகவல் தொழில் நுட்பம்) றிஸ்லி முஸ்தபா கல்வித்திட்ட பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எல்.எம். ஐயூப்கான் தலைமையில், எதிர்வரும் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மேற்படி இணைவு தொடர்பான சிறப்பு விழா நடைபெறவிருக்கின்றது.
விழாவில், முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரிஷாட் பதியுதீன் (எம்.பி) பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசுடனான றிஸ்லி முஸ்தபாவின் மேற்படி அரசியல் இணைவு பெரிதும் வரவேற்கப்படுவதுடன், அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பு முனையாக அமையுமெனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிறப்பு நிகழ்வின் போது றிஸ்லி முஸ்தபா அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)