
posted 28th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு - தொடர்புக்குத் தொலைபேசி
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்படவுள்ள பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ள கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை, இதனை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் மகஜர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக பேரவையின் செயலாளர் செயிட் ஆஷிப் மேலும் தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஜி.சி.ஈ. உயர்தர பாடங்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி நடாத்தப்பட்டிருந்தது.
இப்பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக குறித்த நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சை கடந்த வாரம் இடம்பெற்ற நிலையில், இதன் மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர்ப் பட்டியல் ஞாயிற்றுக்கிழமை (26) கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கிறது.
அத்துடன் இம்மாதம் 28ஆம் திகதி செவ்வாய் தொடக்கம் இவர்களுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் இத்தெரிவில் பாரிய முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாகவும் இதனால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் கவலையடைந்துள்ளனர்.
குறித்த நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடாமல் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் மாத்திரமே வெளியிடபட்டிருக்கிறது. இவ்வாறு நியமனம் வழங்கும் முறையானது சட்டத்திற்கு முரணானது என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவையின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இம்முறைகேடு தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடுவதற்கும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்வதற்கும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறித்த நியமனத்தில் அநீதியிழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும் பட்டதாரிகள் அனைவரும் 0777497979 எனும் கையடக்கத் தொலைபேசி இலக்கத்துடன் தம்மை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறும் சட்டத்தரணி எம்.எம். ஆஸாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் இவ்விவகாரத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் குறித்த நேர்முகப் பரீட்சையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் குளறுபடிகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார்.
இவற்றை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்ட பட்டதாரிகளையும் ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் மற்றும் அதிகாரிகளை அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)