
posted 14th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடுமையான காலநிலையின் தாக்கம் - காப்பற்றும் வழிகள்

அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் இந்த கால கட்டத்தில் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பது சம்பந்தமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸதீன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, உடல் சோர்வு, பக்கவாதம் மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதுடன், நான்கு வயதிற்கும் குறைவான குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், நோய் வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் இந்த காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடும்.
அத்துடன், உடல் வெப்பநிலை 103 பரனைட்டுக்கு மேல் உயரலாம், அதிக தலைவலி, குமட்டல், தலை சுற்றல், மயக்கம், உடல் சோர்வு, தசைப் பிடிப்பு, மனக் குழப்பம், தோல் வறண்டு போவதுடன் சிவப்பு நிறமாதல், இதயம் படபடப்பு, மூச்சு வாங்குதல் மற்றும் சுவாசத்தில் ஏற்படும் சிரமம், மூச்சு திணறல் என்பன இதன் அறிகுறிகளாக காணப்படும்.
இதனால்,
> கூடியவரை சூரிய ஒளி நேராகப்படுவதை முடியுமானவரை தவிர்க்க வேண்டும்
> பாடசாலை மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியில் செல்வதை தவிர்த்தல் வேண்டும்
> மேலும், உடற்பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களை முடிந்தவரை காலை மாலை வேலைகளில் ஈடுபட உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதிய வேளையில் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதை முற்று முழுதாக தவிர்த்தல் வேண்டும்
> தண்டனை வழங்கும் பொருட்டு மாணவர்களை வெளியில் நிறுத்துவதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்
> பாடசாலையில் வெளியே நடைபெற வேண்டிய வைபவங்களை காலை வேளையில் 7:30 மணியுடன் முடித்துக் கொள்ளல் வேண்டும்
> வெப்பம் அதிகமாக உள்ள மதிய வேளைகளில் திறந்த வெளியில் உடற்பயிற்சி மேற்கொள்வதை தவிர்த்தல் வேண்டும்
> வாகனத்தினுள் குழந்தைகளை தனியாக பூட்டி விட்டு செல்வதை தவிர்த்தல் அவசிமாகும். இவ்வாறு செய்வது சில வேளைகளில் உயிர் ஆபத்தையும் ஏற்படுத்தலாம்
வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தவிர்ந்து கொள்ள,
>அடிக்கடி போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும்
> செயற்கை குளிர் பானங்களை தவிர்த்து இயற்கையான பானங்களை நீர் இளநீர் போன்றவற்றை உட்கொள்ளுதல்
> உடற்பயிற்சியில் ஈடுபடும் போது அதிகளவான பானங்களை வழமையாக உட்கொள்வதை விட அதிகமாக உட்கொள்ள வேண்டும்
>மதுபானம், சீனி செறிவாக உள்ள செயற்கை குளிர்பானங்களை தவிர்த்தல்
> எப்பொழுதும் தண்ணீர் போத்தல் ஒன்றை தன் வசம் வைத்திருத்தல்
> குழந்தைகளை வீட்டிற்குள் அல்லது மர நிழலில் விளையாட அனுமதிக்கலாம்
> வெளியில் செல்லும்போது தொப்பிகளை அணிந்து செல்வதற்கு ஊக்கப்படுத்தவும்
> பொதுமக்கள் வெளியில் இருந்து தங்களை பாதுகாப்பதற்காக வெள்ளை மஞ்சள் மற்றும் இள நிறங்கள் உடைய பொருத்தமான உடைகள் தொப்பி போன்றவற்றை அணியலாம்
> முடிந்தவரை காற்றோட்டமான அல்லது குளிர்ச்சியான இடங்களில் தரித்திருத்தல்
> உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருப்பதற்காக அடிக்கடி மேல் கழுவுதல், மேலும், தளர்வான காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிதல்
> திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் போதிய அளவு நீர் அருந்தல் அவசியம்
> மேலும் முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்க வேண்டும்
> வெப்பமான கால நிலைக்கு ஏற்ற பழங்களான தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடை என்பன சிறந்தவை. இவற்றை துண்டுகளாக அல்லது பானங்களாக உட்கொள்ளலாம்
என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)