
posted 22nd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடல் பெருக்கெடுத்ததால் பதற்றத்தில் மக்கள்
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று (22) புதன்கிழமை மதியம் திடீரென கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உட்புகுந்துள்ளது.
இன்று அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில், மீனவர்கள் கடற்தொழிலுக்குச் செல்லவில்லை.
இந் நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்ததோடு, கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்தன.
எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
திடீரென கடல் நீர் உட்புகுந்தமையினால் வங்காலை மீனவர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்துக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலைமையை பார்வையிட்டதோடு, சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)