
posted 23rd May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகத் தெரிவில் குளறுபடி*
கற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் நிர்வாகத்தெரிவின் போது பொதுவான விதிளைப் பின்பற்றும் கூட்டுறவு ஆணையாளர் வடமராட்சி கிழக்குப் பகுதிக்கு மட்டும் தனியான விதிகளை நடைமுறைப்படுத்துகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத் தலைவரும், சமூக செயற்பாட்டளருமான இ. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) வியாழக் கிழமை வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்றசெய்தியாளர் சந்திப்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்ததாது;
வடமராட்சி கிழக்கில் மட்டும் பொதுச்சபை பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க முடியாத க நிலை நிலவுகின்றது. ஏனைய நிர்வாகத் தெரிவின் போது கூட்டங்களில் கலந்து கொள்ளும் அனைவரும் வாக்களிக்க முடியும். ஆனால், வடமராட்சி கிழக்கில் அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படாமலே நிர்வாகத்தெரிவு இடம்பெவுள்ளது. இது அரசோடு சேர்ந்து இயங்குகின்றவர்களுக்குச் சார்பானவர்களை நிர்வாகத்துக்குள் உள்வாங்கும் செயற்பாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.
கூட்டுறவுத் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற அனைத்து கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களிலும் பொதுச்சபைக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் அனைவரும் தமது சமாசங்களிற்கு நிர்வாகத் தெரிவு செய்யப்படும்போது வாக்களிக்கக் கோரும் சந்தர்ப்பங்களில் அனைத்து பொதுச்சபை உறுப்பினர்களும் வாங்களித்தே நிருவாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவது வழமையாகும். எனினும், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டும் சமாசத்திற்க்குத் தெரிவு செய்யப்பட்ட பொதுச்சபை உறுப்பினர்களிலிருந்து வாக்களிக்கும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் மட்டும் வாக்களிக்கும் நடைமுறை உள்ளது.
வடக்கு மாகாணத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் மட்டுமே இந்நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன், இந்நிலை மாற்றப்பட்டு பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கக் கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாக கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் தலையிட்டு எமக்கான சாதகமான பதிலைத் தரவேண்டும். இவ்வாறு பதில் தரத் தவறும் பட்சத்தில் அவர்களுகெதிராக நீதிமன்றத்தில் பொது நலவழக்கின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யவும் பின்னிற்கமாட்டோம்.
தற்போது சீனாவில் இருந்து ஒருதொகுதி உதவிப்பொருட்கள் எடுத்து வரப்பட்டு மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுஎல்லாம் தேர்தல் பித்தலாட்டச் செயற்பாடுகள்தான் என்று கருத வேண்டியதாக உள்ளது. எம்மக்களுக்கு யாரும் பிச்சை போடவேண்டாம். அவர்களுக்கு இடையூறாகவுள்ள தடைளை அகற்றி சுதந்திரமாக தொழில் செய்யவிட்டாலே போதும். இதனால் அவரவர் சுயமாக முன்னுக்கு வருவார்கள் எனத் தெரிவித்தார் முரளிதரன்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)