
posted 13th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அரச சொத்துகள் விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள் அல்லது வர்த்தகங்களை விற்பனை செய்வதற்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விசேட அறிவிப்பொன்றை விடுத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு சொந்தமான சில சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை விற்பனை செய்யும் நடவடிக்கைகளால், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களுக்கான செலவினங்களைக் குறைத்து, அது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையிலேயே தற்போதைய அரசின் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எஞ்சிய காலப்பகுதியில் நாட்டை ஆளுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இடைக்கால ஏற்பாடாகும்.
இவ்வாறான நிலையில் அவசர அவசரமாக அரச சொத்துக்களை விற்பதன் மூலம் நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான பலனைப் பெற்றுக்கொடுக்க முடியாது என்றார்.
இது விடயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)