
posted 12th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
யாழிலிருந்து திருக்கேதீஸ்வரத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட கொடிச்சீலை
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்கான கொடிச்சீலை இன்று 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் கோவிலிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கன்டி வீதியிலுள்ள சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது.
திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இன்று 13ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
1982 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்தே திருக்கேதீஸ்வரத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்ட நிலையில் யுத்த காலத்தில் அந்த நடைமுறை கைவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 40 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் 2023 முதல் மீண்டும் யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)