
posted 9th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
முக்கோண வடிவம் கொண்டது
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற முக்கோண வடிவம் கொண்டதாகும். இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்துள்ளார்.
மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் திருபதிப்படுத்தும் வகையில் இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுக்கப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மேதின செய்தியில் சொல்லியுள்ளமையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இது பற்றி ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி அவர்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையின் இனப்பிரச்சினை என்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற முக்கோண வடிவம் கொண்டதாகும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினை என்பது வடக்கு கிழக்குக்கு வெளியே சிங்கள பேரினவாதிகளால் முஸ்லிம்களும், தமிழ் மக்களும் முகம் கொடுத்ததில் இருந்து ஆரம்பமாகிறது. அண்மைக் காலம் வரை வடக்கு கிழக்குக்கு வெளியே முஸ்லிம்கள் மட்டுமே சிங்கக பேரினவாதத்துக்கு முகம் கொடுத்தார்கள். இன்னமும் நீறுபூத்த நெருப்பாக உள்ளது.
பின்னர் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் பேரினவாதத்தால் தாக்கப்பட்டு வடமாகாண முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் விரட்டப்பட்டதுடன் கிழக்கில் பள்ளிவாயல்களில் படுகொலை, மூதூரில் சுட்டு வெளியேற்றியமை என்ற பல வடுக்களை கொண்டதாகும்.
அதே போல் வடமாகாண தமிழ் மக்கள் சிங்கள பேரினவாத்தின் நிகழ்ச்சி நிரலால் காணி இழப்பு, அத்துமீறிய அரச ஆதரவு குடியேற்றம் போன்ற இன பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள்.
இவற்றை சரியாக தீர்ப்பதாயின் இப்பிரச்சினையின் முக்கோணத்தை நன்கு புரிந்து கொண்ட அரசியல்வாதியால் மட்டுமே முடியும். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இது விடயத்தில் தெளிவாக இருப்பது அவர் பேச்சுக்களில் இருந்து புரிகிறது.
ஆனாலும் இத்தெளிவு தமிழ் கூட்டமைப்பு கட்சிகளுக்கும், மனோ கணேசன் போன்றோருக்கும் இன்னமும் புரியாதிருப்பது கவலைக்குரியதாகும். அவ்வாறு புரிந்திருந்தால் வடக்கு கிழக்கை இணைக்க கோருவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு தடைபோட்டிருக்க மாட்டார்கள்.
எம்மை பொறுத்தவரை இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது ஒன்பது மாகாண சபைகளை கலைத்து விட்டு ஐந்து மாகாண சபைகள் உருவாக்கப்பட வேண்டும். அவை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்தி, மேல் மாகாணங்களாகும்.
தேவை ஏற்பட்டால் கல்முனை பிரதேச செயலகம் என்பது நூறுவீதம் தமிழில் இயங்கிய போதும் கல்முனை தமிழ் மக்களுக்கென தனியான உப செயலகம் அமைத்திருப்பது போன்று மேற்படி மாகாணங்களில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு உப மாகாண சபைகள் அமைத்து அந்தந்த இன மக்கள் அவற்றினூடாக சேவைகளை பெறமுடியும்.
ஆகவே, இனப்பிரச்சினை விடயத்தில் கூடிய அவதானம் செலுத்தும் ஜனாதிபதி அவர்களின் கருத்தை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதுடன் இது பற்றிய முத்தரப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)