
posted 31st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய் கிழமை (30) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான காதர் மஸ்தான் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிசாட் பதியுதீன், சாள்ஸ் நிர்மலநாதன் , விநோநோகராதலிங்கம் , தீபன் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் நான்கு படைகளின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில்;
எங்களுக்கு கிடைக்கப்பெற்ற சுற்று நிருபத்தின்படி பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் விடயங்கள் ஆராயப்பட்டு அதில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் மட்டுமே மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் ஆராயப்பட்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான காதர் மஸ்தான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில்;
முசலி பிரதேச செயலகப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அலைக்கட்டு காணி பிரச்சினை தொடர்பாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், இவற்றை வழங்குவதற்கான நடவடிக்கை ஏடுக்கப்பட்டுள்ளது என காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மிக நீண்ட காலத்துக்குப் பின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய் கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் பரந்தளவு மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் இதில் எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக நாம் ஆராய்ந்தோம். நாட்டில் எற்பட்டிருந்த பொருளாதார பிரச்சினை காரணமாகவே கடந்த காலத்தில் இந்த மாவட்ட ஒருங்கிணைப்பக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியாதிருந்தது.
தற்பொழுது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஒழுங்கான கட்டமைப்பின் கீழ் பொருளாதாரம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இதன் காரணமாகவே இந்த கூட்டத்தை இப்பொழுது கூட்டக்கூடிய நிலை எற்பட்டது.
இக்கூட்டத்தில் காணிகளின் ஆவணங்கள் வழங்கல், வன இலாகாவிடமிருந்து காணிகளை விடுவித்தல், அபிவிருத்தி தொடர்பாக குறிப்பாக மன்னார் மாவட்டம் பொருளாதாரத்தில் தங்கியிருக்கும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி இவைகள் தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டு தீர்வுகள் எடுக்கப்பட்டு இது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முசலி பிரதேச செயலகப் பிரிவில் அலைக்கட்டு காணி பிரச்சினை தொடர்பாக கோப்பாய் கமிட்டியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதிற்கு அமைய நான் இதன் அமைப்பில் ஒரு உறுப்பினராக இருப்பதால் இக் காணி தொடர்பாக பேசியதைத் தொடர்ந்து காணிக்குரிய ஆவணங்கள் வழங்கல் அல்லது ஆவணங்கள் வழங்கியவர்களுக்க இவற்றை வழங்குவது, இதன் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விரைவில் இவற்றை பொது மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் சிலர் இந்த காணியை அத்துமீறி பிடிக்க முற்பட்டபோதே அது அன்று தடுத்து நிறுத்தப்பட்டது. இதை ஒருசிலர் குறிப்பாக மாற்றுக் கட்சியினர் நான் இப் பகுதியில் அபிவிருத்திக்கு குந்தகம் செய்வதாக பிரச்சாரம் செய்திருந்தனர். அன்று நான் இதை தடுத்து நிறுத்தாதிருந்தால் ஆவணம் இல்லாதவர்களுக்கு இங்கு காணிகள் கிடைத்திருக்காது.
இப்பொழுது இதனால் ஆவணம் இல்லாதவர்களுக்கும் இந்த காணி வழங்குவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும், மன்னார் சவுத்பார் கரையோரப் பகுதியில் கடலட்டை பண்ணை வளர்ப்பிற்காக அடாத்தாக காணி பிடிப்பதால் அப்பகுதியில் கரையோர மீன்பிடியாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திணைக்களங்கள் இணைந்து எத்தனை பேர் செய்கின்றார்கள் எத்தனை பண்ணைகள் காணப்படுகின்றன எவ்வளவு காலமாக இவைகள் நடைபெற்று வருகின்றன என்ற அறிக்கையை அடுத்தக் கூட்டத்தில் சமர்பிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக, மன்னார் பிரதேச சபையில் இருக்கும் தீயணைக்கும் வாகனத்தை மன்னார் நகர சபைக்கு மாற்றி அவற்றை உடன் செயற்படுத்தும் நிலையில் வைத்திருக்குமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபையில் இருக்கும் இந்த தீயணைக்கும் வாகனம் பூரணப்படுத்தப்பட்ட வாகனம் என சொல்ல முடியாது. தீயணைக்கச் செல்ல நேரிட்டால் இவ்வாகனத்துக்குப் பின்னால் தண்ணீர் பவுசர் ஒன்றும் செல்ல வேண்டிய நிலை இருக்கின்றது. மன்னார் பிரதேச சபையிலும் மன்னார் நகர சபையிலும் ஆளணியற்ற நிலையிலேயே இந்த தீயணைக்கும் வாகனம் காணப்படுகின்றது என இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.மன்னார் நகர சபைக்கு மேலும் 14 வெற்றிடங்கள் காணப்படுவதால் அவற்றையும் நிவர்த்தி செய்யும்படி மன்னார் நகர சபை செயலாளர் இச்சந்தர்பத்தில் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு பலவிதமான தீரமானங்கள் எடுக்கப்பட்டன.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)