
posted 15th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
புத்தர் சிலை நிறுவுதல் விவகாரம்
புத்தர் சிலை நிறுவுதல் விவகாரம் தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றை திரிவு படுத்தும் இதை ஒரு காலமும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், (ஈ.பி.ஆர்.எல்.எப்) இரா. துரைரெத்தினம் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது,
தமிழர்கள் பௌத்த மதத்திற்கு எதிரானவர்கள் அல்லர். இதேபோல் அனைத்து மதங்களையும், மனித நேயத்தையும், ஜனநாயகத்தையும், மனித விழும்மியங்களையும், மனித பண்புகளையும் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் நாங்கள். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆயுதப் போராட்டம், உக்கிரமடைந்த நிலையிலும் கூட, அரச பயங்கரவாதம் இனரீதியான செயற்பாடுகள் தமிழ் இனத்திற்கு எதிராக தூபமிடப்பட்ட நிலையிலும், தமிழ்பாரம்பரிய புனித தலங்களில் குண்டு போட்டு அழிக்கப்பட்ட நிலையிலும் தமிழ் சமூகத்திற்கு மத்தியில் இருந்த ஏனைய இனத்தவர்களின் தொல்லியல் அடையாளங்கள், மதம் சார்புள்ள புனித அடையாளங்கள் ஏன் விகாரைகள் கூட அவ் இனங்கள் இடம் பெயர்ந்த சூழ்நிலையிலும் தமிழர்களாகிய நாங்கள் ஏனையவர்களின் கலாசார அடையாளங்களை பேணி பாதுகாத்து வந்ததே எமது சமூகமாகும். ஏனைய இனங்களின் புனித தலங்களுக்கு தவறாமல் சென்று வழிபடுவதும் இன்றும் கூட சமூகத்தில் குறிப்பிட்டோர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அரச பயங்கரவாதத்தால் புனித தலங்களுக்கு குண்டு போடுவதும், மாற்று இனத்தவர்களின் புனித தலங்களை, தொல்லியல் அடையாளங்களை வேணுமென்றே இல்லாமல் செய்ததும் பௌத்த தர்மமா? அரசுக்குள் இருந்து கொண்டு புனித தலங்களில் குண்டு வீசுவதும், குண்டு வைப்பதும், புத்தசிலைகளை நிறுவுவதும் இவ்வளவு காலமும் நடைபெற்று வருவது அரசின் கையாலாகாத தனத்தைக் காட்டுகின்றது. மௌனமாக இருப்பது ஒத்துழைப்பதற்கு சமனாகும். இது அரச நீதியான கொள்கையா? மூவின மக்களும் வாழுகின்ற இலங்கை நாட்டில் ஒரு இனம் சார்பாக ஆளுந்தரப்பிலுள்ள சரத்வீரசேகர, முன்னாள் அமைச்சர் சிங்கள பௌத்த நாடு என்று ஏற்றுக் கொள்ளவிடின் ஆபத்தை சந்திக்க நேரிடும், பௌத்த சிங்கள நாடு என ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறுவது சரியா? இது அரச கொள்கைக்கு முரண்பாடு இல்லையா?
ஒரு அமைச்சின் கீழுள்ள மதத்தை, அந் நிருவாகத்தை வெளியாளர்கள் நேரடியாக பயன்படுத்துவதென்பது அரச சுற்று நிருபத்திற்கு முரணானவை. மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் இப் பிரச்சினையை பேச்சுவார்த்தைக்கு எடுத்து இருந்தாலும் முடிவு இல்லாமலே முடிவு அடைந்துள்ளது. இந்நாட்டில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின் அனைத்து இனங்களின் மதச் சுதந்திரத்தை, கலாசாரத்தை, மனித விழுமியங்களை, புனித அடையாளங்களை பாதுகாக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)