
posted 15th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூரில் நடத்தப்பட்ட பிறை மாநாடு
கிழக்கிலங்கையைச் சேர்ந்த முக்கிய முஸ்லிம் பிரதேசமான நிந்தவூரில் கொழும்பு பெரிய பள்ளிவாசலினால் பிறை மாநாடொன்று சிறப்பாக நடத்தப்பட்டது.
இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரியும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினருமான கலாநிதி. ஏ.எம். முஹம்மத் சாலிஹீனின் மேற்பார்வையிலும் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினதும் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெற்றது.
இலங்கையில் பிறை பார்த்தல் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள், பிரச்சினைகள் தொடர்பில் பொது மக்களுக்கு மிகச் சிறப்புறத் தெளிவூட்டும் வகையிலும், பிறை பார்த்தலில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நீண்ட கால முக்கிய வகிபாகம் தொடர்பிலும் விளக்கமளிக்கும் வகையில் மாநாட்டு விடயங்கள் அமைந்திருந்தன.
நிந்தவூர் அல் - மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை வரவேற்பு மண்டபத்தில், மௌலவி யூ.எல். றிபாயுதீனின் கிராத்துடன் ஆரம்பமான இந்த மாநாட்டின் ஆரம்பித்ததில், சிரேஷ்ட வானிலை அதிகாரியும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினருமான கலாநிதி முஹம்மத் ஸாலிஹீன் வரவேற்புரை நிகத்தினார்.
மேலும், மாநாட்டிற்குத் தலைமை வகித்த கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழுத் தலைவர் உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி எம்.பீ.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) தலைமைப் பேருரை ஆற்றியதுடன், பிறைபார்த்தல் தொடர்பான சிறந்த விளக்கமும் அளித்தார்.
அத்துடன், “சர்வதேசப் பிறை” எனும் தலைப்பில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு செயலாளர் உஸ்தாத் ஏ.எல்.எம். மஸீன் அல் மக்தூமி (அல் ஹஸனீ) அவர்களும், “பிறை விவகாரத்தில் சாட்சியத்தின் வகிபாகம்” எனும் தலைப்பில் பிறைக்குழு உறுப்பினர் உஸ்தாத் சீ.ஐ.எம். அஸ்மீர் (அல் ஹஸனீ) அவர்களும் மாநாட்டில் பேருரைகளாற்றினர்.
மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு பிறை பார்த்தல் தொடர்பிலான பெரும் புரிதல்களையும், தெளிவையும் ஏற்படுத்திய இந்த மாநாட்டின் இறுதியில் நிந்தவூர் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைச் செயலாளர் எம்.எம். கமறுத்தீன் (ஷர்க்கி) நன்றியுரை பகர்ந்ததுடன், தலைவர் உஸ்தாத் கலீபதுஷ்ஷாதுலி எம்.பூ.எம். ஹிசாம் (அல்-பத்தாஹி) அவர்களினால் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
உஸ்தாத் கலீபத்துஷ் ஷாதுலி எம்.பீ.எம். ஹிஷாம் (அல் பத்தாஹி) மாநாட்டை ஆரம்பித்து வைத்து தலைமைப் பேருரை ஆற்றுகையில்,
“இறை நேசர்கள், சூபியாக்கள் வருகை தந்து, ஆன்மீக சுடர் மங்காமல், மறையாமல் ஒளிர்கின்ற நிந்தவூர் மண்ணில் இத்தகைய முக்கிய மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியதாகும். முஸ்லிம்களின் வாழ்வியலில் பிறை மிக முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த வகையில் இலங்கையில் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை பார்த்தலில் பல கசப்பான அனுபவங்களையும் கடந்து முக்கிய வகிபாகத்துடன் திகழ்கின்றது. இங்கு மாதாந்தம் ஒன்று சேர்ந்து பிறை பற்றிய தீர்மானங்களெடுப்பது வரலாற்றுப் பாரம்பரியமிக்கது” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)