
posted 30th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
கிழக்கில் ஆரம்பமான ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயங்களின் திருக்குளிர்ச்சி விழாக்கள்
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சிலம்புச் செல்வி ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயங்களின் வருடாந்த திருக்குளிர்ச்சி விழாக்கள் சிறப்புற ஆரம்பமாகியுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி, துறை நீலாவணை உட்பட அம்பாறை மாவட்டத்தில் பிரபலமான காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம், கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் உட்படமேலும் சில கண்ணகி அம்மன் ஆலயங்களிலும், குறித்த வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி மஹோற்சவ விழாக்கள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை கிழக்கில் பிரசித்தி பெற்ற காரைதீவு அருள் மிகு ஸ்ரீகண்ணகி அம்மன் ஆலய சோப கிருது வருட, வருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிரச்சி விழா கடந்த 29 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் வெகு சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
வைகாசித் திங்கள் 15ஆம் நாளான கடந்த திங்கட் கிழமை மாலை கடல் தீர்த்தம் எடுத்து வந்து திருக் கல்யாணக்கால் நாட்டும் வைபவத்துடன் ஆரம்பமாகியுள்ள திருக்குளிர்ச்சி விழா, எதிர்வரும் 6 ஆம் திகதி 06.06.2023 திங்கள் கிழமை உதயம் திருக்குளிர்ச்சி பாடுதலுடன் நிறைவு பெறவுமுள்ளது.
மேலும், இந்த திருக்குளிர்ச்சி விழாவை யொட்டி காரைதீவு பிரதேசமே பெரும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
கற்புக்கரசி கண்ணகியின் பெருமையைப் பறைசாற்றும் பதாதைகள் பல முக்கிய இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான வீதி ஆலயவளாகம் என்பவற்றில் கொடி மற்றும் மின் அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை மேற்படி திருக்குளிர்ச்சி விழா தொடர்பான பொதுக் கூட்டமும், விழா விஞ்ஞாபன வெறியீடும் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)