
posted 19th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள்
கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம், சமத்துவ, சகவாழ்வு கட்டியெழுப்பப்பட்டு, இனவாதமற்ற நல்லாட்சி மலர்வதற்கு புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் உத்வேகத்துடன் செயற்பட வேண்டும் என்று கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதிய ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்து, பேரவையின் சார்பில் அதன் செயலாளர் செயிட் ஆஷிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணத்தில் சிங்கள இனத்தைச் சேர்ந்தோரே காலாகாலமாக ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019 ஆம் ஆண்டு தமிழ் பேசும் சமூகத்தில் இருந்து முதன்முறையாக எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்ட போதிலும் தமிழர் தரப்பில் கிளம்பிய எதிர்ப்புக் காரணமாகவும் ஈஸ்டர் குண்டுவெடிப்பின் எதிரொலியாகவும் சில மாதங்களிலேயே அவர் அப்பதவியை இராஜினாமா செய்ய நேரிட்டது.
தற்போது இ.தொ.கா. தலைவரான செந்தில் தொண்டமான் கிழக்கின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கிழக்கு மாகாணத்தில் தமது சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற அபிலாஷையும் வேண்டுதலும் முஸ்லிம்கள் மத்தியில் நிறையவே இருந்த போதிலும் சகோதர இனத்தைச் சேர்ந்த செந்தில் தொண்டமானின் நியமனத்தை வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை சிதறடித்து விடாமல், கிழக்கில் முஸ்லிம் சமூகத்தை சமத்துவமாக நடத்துவதற்கு புதிய ஆளுநர் முன்னிற்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.
கடந்த காலங்களில் சிங்கள பேரின ஆளுநர்கள் இனவாதமாக செயற்பட்டதனால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இரண்டும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதேவேளை கிழக்கு மாகாண சபையில் சிங்கள, தமிழ் மேலதிகாரிகளின் பாரபட்சமான செயற்பாடுகளினால் முஸ்லிம்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆற்றல், அனுபவம், தகுதி, சேவை மூப்பு இருந்தும் முஸ்லிம் நிர்வாக சேவை அதிகாரிகள், உரிய பதவி நிலைகளுக்கு நியமிக்கப்படாமல், திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர்.
இனப்பாகுபாடு காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காணி, கல்வி, சுகாதாரம், நிர்வாகம் என்று அனைத்துத் துறைகளிலும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் நிவர்த்தி செய்வார் என்கிற எதிர்பார்ப்பு முஸ்லிம்களிடையே காணப்படுகிறது. இனவாத சிந்தனையற்ற பரம்பரையில் வந்த செந்தில் தொண்டமான், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இனவாத அழுத்தங்களுக்கு அடிபணியாமல், முஸ்லிம்களையும் அரவணைத்து, அவர்களது உரிமைகளுக்கும், அபிலாஷைகளுக்கும் பதிப்பளித்து, சமத்துவமாக நடத்துவதன் ஊடாக கிழக்கின் நல்லாட்சிக்கு வித்திட்ட ஓர் உதாரண புருஷராக வரலாற்றில் இடம்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வாழ்த்துகின்றோம் என கிழக்கிலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)