
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காணியை விடுவிக்கத் தொடரும் போராட்டம்
தையிட்டியில் தமிழ் மக்களின் காணியில் அடாத்தாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றவும் - காணிகளை விடுவிக்கவும் கோரிய போராட்டம் நேற்றும் (04) வியாழன் இரவிரவாக தொடர்ந்தது.
இதேநேரம், இந்தப் போராட்டம் இன்று வெள்ளிக் கிழமையும் (05) தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிகளாவான மக்கள் இந்தப் போராட்டத்தில் அணிதிரள வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விகாரையை அகற்றவும் - அதை சுற்றியுள்ள சுமார் 100 பரப்பு காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
நேற்று முன்தினம் இரவும் இந்தப் போராட்டம் தொடர்ந்த நிலையில் அங்கு படைத்தரப்புகள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கவும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டது. அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட செ. கஜேந்திரன், பொன் மாஸ்ரர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு நேரில் சென்ற மல்லாகம் நீதிவான் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்று அனுமதி வழங்கியதுடன் விகாரைக்கு எதிரில் போராடவும் அனுமதி வழங்கினார்.
இதையடுத்து நேற்று இரவும் மக்கள் திரண்டு போராட்டம் தொடர்ந்தது. ஆனாலும், பொலிஸார் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமான செயல்பாடுகளை தொடர்ந்திருந்தனர். “நீதிமன்ற கட்டளையை மீறி நடமாடினால் கைது செய்யப்படுவீர்கள்”, என்று அவர்கள் போராட்டக்காரர்களை மிரட்டியதுடன் தொடர்ச்சியாக அவர்களை குழப்பும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வந்தனர்.
இதேசமயம், போராட்டம் ஆரம்பித்தது முதல் நேற்றைய தினமும் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செ. கஜேந்திரன் தொடர்ச்சியாக பங்கேற்றிருந்தார். அவருடன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறீதரன், எம். ஏ. சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானம், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ. சரவணபவன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)