
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
வாசிப்பு கலாசாரம் குறைந்து வருகிறது
“போதைப் பொருட்களை விட மிகவும் மோசமானது செல்போன் என்ற போதையாகும். இந்த செல்போன் கலாசாரத்தால் வடக்கு கிழக்கில் வாசிப்பு கலாசாரம் பொதுவாக குறைந்து வருகிறது.”
இவ்வாறு காரைதீவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கவலை தெரிவித்தார் .
காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் பைந்தமிழ்க்குமரன் ஜே. டேவிட் எழுதிய "கறையான் தின்ற கனவுகள்" என்ற சிறுகதை நூல் வெளியீட்டு விழா அதிபர் எஸ். மணிமாறன் தலைமையில் காரைதீவு இ.கி.மி பெண்கள் வித்தியாலயத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் கௌரவ அதிதிகளாக கிழக்கு மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதியசயராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதல் பிரதியை பிரதம பொறியியலாளர் பி. இராஜமோகன் பெற்றுக் கொண்டார்.
அங்கு பாராளுமன்ற உறுப்பினர் கலையரசன் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் தமிழ் மக்கள் பாரிய யுத்தத்தை எதிர்கொண்டு சின்னாபின்னமாக போயிருக்கின்றார்கள். அவர்கள் பீனிக்ஸ் பறவை போல் மீண்டெழுவதற்கு இலக்கியம் வழி சமைக்க வேண்டும்.
இன்று பாடசாலை மாணவர்கள் இந்த செல்போன் கலாசாரத்தால் மிகவும் மோசமாக படிப்பை இழந்து வருகிறார்கள். வாசிப்பை தவிர்க்கிறார்கள். சமுதாயத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகலரும் எப்பொழுதும் செல்போனை நோண்டிக் கொண்டிருக்கின்ற ஒரு அவலத்தை பார்க்கின்றோம். சமூகத்தின் நல்லது நடக்கின்றபொழுது அதைத் தட்டிக் கொடுப்பதை விடுத்து அதில் குறை காண்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் மாறிக் கொண்டிருக்கிறோம். எமது சமூகம் வளரவேண்டுமாக இருந்தால் புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதனூடாக நாங்கள் வெற்றி அடைய வேண்டும் என்றார். நூலாசிரியர் டேவிட் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)