
posted 8th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தமிழ் மக்களை இனியும் ஏமாற்றமுடியாது
யாழ்ப்பாணத் தமிழ் மக்களை இனியும் தமிழ்த் தேசிய முண்ணனியினரால் ஏமாற்றமுடியாது என ரெலொ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
ரெலோ இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறிசபாரத்தினத்தின் 37 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
அண்மையில் மிகப்பெரிய ஒரு கதவடைப்புப் போராட்டத்தை வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் நடத்தினோம். பாரிய போராட்டமாக தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்களின் ஆதரவோடு முதற் தடவையாக அதை நடத்திக் காட்டி இருந்தோம்.
எதற்காக அதனை செய்திருந்தோம் என்பதை அறியாத தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அந்த ஹர்த்தாலை எள்ளி நகையாடினார்கள். தமிழ் மக்களின் உணர்வை எள்ளி நகையாடினார்கள். அதன் விளைவு இன்று தெரிகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை எள்ளி நகையாடியவர்கள் இன்று தையிட்டியில் விகாரை கட்டி முடிந்து கலசம் வைத்த பின் விகாரையை இடித்துவிடப் போகின்றோம் என தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
நாளை சாவகச்சேரியில், நெடுங்கேணியில் விகாரை வரும். எல்லா இடங்களிலும் வரும். இவ்வாறு தனித்தனியே போராடப்போகின்றோமா அல்லது மக்களை ஒரு தேசமாக ஒருங்கிணைத்து இவற்றைத் தடுத்து நிறுத்தப்போகின்றோமா என்பதுதான் எமது கேள்வி.
அதற்காகத்தான் நாங்கள் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளையும் புலம்பெயர் அமைப்புகளையும் ஒன்று சேர்ந்து ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தோம்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் போராட்டத்தை தையிட்டியில் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
தமிழ் மக்கள் குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் மக்கள் இவ்வாறான ஏமாற்று அரசியல் செய்பவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும். சரியான தலைமையைத் தெரிவு செய்ய வேண்டும். தமிழ் மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கக் கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)