
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சவூதி - ஈரான் உறவு நிலை பெற வேண்டும் பணிப்பாளர் மாஹிர் கருத்து
“மத்திய கிழக்கில் பரமவைரிகள் எனக் கருத்தப்படும் சவூதி அரேபியாவும் ஈரானும் உறவைப் புதுப்பிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளமை பெரும் வரவேற்புக்குரிய விடயமாகும். இது அங்கு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்க வேண்டுமென்பதே எல்லோரதும் அவாவாகும்.” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், உயர் பீட உறுப்பினருமான முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் கருத்து வெளியிட்டார்.
சுமார் ஏழு வருட காலமாக சீர் குலைந்துபோயிருந்த சவூதி ஈரான் உறவில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் தொடர்பில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் மாஹிர் மேற்படி விடயம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில் மேலும் பின்வருமாறு கூறினார்.
சவூதி அரேபியாவுக்கும் ஈரானுக்குமிடையிலான புதிய ஒப்பந்தம் சீனாவின் முன்னெடுப்பில், அவர்களது முயற்சியில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளமையும், சவூதி அரேபியா இந்த உறவைப் புதுப்பிக்க இணங்கிக் கொண்டமையும், மேற்குலகில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் நீண்ட கால நட்பு நாடான சவூதி அரேபியா இராஜதந்திர உறவுகளைப் புதுப்பிக்கவும், ஈரானுடன் நல்லிணக்கத்திற்கு வரவும் முன் வந்தமை அமெரிக்க வல்லாண்மையின் சரிவுக்கு எடுத்துக்காட்டு என்ற விமர்சனமும் உண்டு.
ஆனாலும் இதன் மூலம் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக யெமனுக்கு எதிராக சவூதி அரேபியாவும், நேச நாடுகளும் விதித்திருந்த பொருளாதாரத்தடைகள் நீக்கப்பட்டு, இராஜ தந்திர உறவுகளும் மீளவும் புதுப்பிக்கப்பட்ட நல்ல சூழல் தோற்று விக்கப்பட்டுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
இந்த இணக்கப்பாடு மத்திய கிழக்கு நிலவரங்களில் மாற்றத்தைக் கொண்டு வருமெனினும், இத்தகைய ஒரு உடன்படிக்கையை, நல்லிணக்கத்தை விரும்பாத, சகித்துக் கொள்ள முடியாத வல்லாதிக்க சக்திகள் உடன்படிக்கையை சீர்குலைத்து இரு நாடுகளையும் பகை நாடுகளாக வைத்திருப்பதன் மூலம் தமது நலன்களை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கலாமென்ற எச்சரிக்கையுமுள்ளது.
இருப்பினும் ஈரான் ஆதரவு ஹ{த்தி கிளர்ச்சியாளர்களுடானான புதிய போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைக்காக கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டிலுள்ள யெமன் தலை நகருக்கு சவூதி அரேபிய தூதுக்குழு ஒன்று அண்மையில் பயணித்து பேச்சு வார்த்தையும் இடம்பெற்றுள்ளமை வரவேற்புக்குரியதாகும்.
சர்வதேச நாடுகளிலிருந்து சவூதிக்கு சன்மார்க் கடமையினை நிறைவேற்ற வருகை தரும் முஸ்லிம்களின் நலன் கருதியும் ஏனைய நலன்களுக்காகவும் சவூதி அரசு எடுத்த முடிவு உலக முஸ்லிம்களினால் விதந்து பாராட்டப்படுகின்றது. எனவே, சவூதி ஈரான் இராஜ தந்திர உறவுகள் நிலையான, நீடித்தவையாக மிளிர வேண்டும். முடிவின்றி பகை தொடரக் கூடாது.
சவூதி அரேபியாவும், ஈரானும் அடிப்படையில் முஸ்லிம் நாடுகளாதலால் புதிய இணக்கப்பாடுகள், நல்லுறவு நிலையானவையாக நீடிக்கப் பிரார்த்திப்போம்” என்றார்.
சம்மாந்துறையில் உள்ள பணிப்பாளர் மாஹிரின் அலுவலகத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)