
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கோட்டுக்குச் சென்ற தையிட்டி விகாரை விவகாரம்
தையிட்டி விகாரை வழிபாட்டுக்கோ அங்கு நடைபெறும் நிகழ்வுகளுக்கோ எந்த இடையூறும் ஏற்படுத்தாது போராட்டத்தில் ஈடுபடலாம் என்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
அத்துடன், விகாரைக்கு எதிரில் உள்ள காணியில் போராட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்றும் நீதிவான் அனுமதி வழங்கினார்.
வெள்ளிக் கிழமை (05) மாலை, தையிட்டி விகாரைப் பகுதிக்கு நேரில் சென்ற நீதிவான் நிலைமைகளை நேரில் அவதானித்தார். இதன் பின்னரே மேற்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் நடத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன் உட்பட கைது செய்யப்பட்ட ஐவர் நேற்று மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொலிஸார் மன்றில் கோரினர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் உத்தரவு வழங்குவதாக நீதிவான் குறிப்பிட்டார்.
இதையடுத்து நேற்று மாலை விகாரைப் பகுதிக்கு நீதிவான் சென்று நிலைமைகளை அவதானித்தார். இதன்போது, “ஒவ்வொருவரும் அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் செயல்பட வேண்டும். விகாரையின் முகப்பிலோ, பாதையிலோ தடைகளை ஏற்படுத்தக்கூடாது. விகாரையில் வழிபாட்டுக்குவரும் மக்களுக்கோ, விகாரையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கோ இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இதேபோன்று, விகாரையின் காணி உரித்து தொடர்பான பிரச்னைகள் இருந்தால் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், இந்த வழக்கின் தவணையை எதிர்வரும் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் கட்டளை பிறப்பித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)