
posted 19th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பு
கிழக்கு மாகாண ஆளுனராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி தனது வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளது.
இது பற்றி கட்சியின் தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்ததாவது,
கிழக்கு மாகாணத்தின் இரண்டாவது தமிழ் பேசும் ஆளுனராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கிழக்கு மாகாணத்தை சேராதவராக இருந்தாலும் அவரும் இந்த நாட்டு குடிமகன் என்ற வகையிலும் தமிழ் பேசுபவர் என்ற வகையிலும் அவரின் நியமனத்தை வரவேற்கிறோம்.
முன்னர் ஆளுனராக ஹிஸ்புல்லாஹ் அவர்கள் நியமிக்கப்பட்டபோது வியாழேந்திரன் போன்ற இனவாதிகள் ஹிஸ்புள்ளாவின் நியமனத்துக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்து அவரை ராஜினாமா செய்வித்தனர். ஆபால் செந்தில் தொண்டமானின் நியமனத்தை எந்தவொரு முஸ்லிம் கட்சியும் கண்டிக்காததன் மூலம் முஸ்லிம் சமூகம் எப்போதும் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையை விரும்புகிறது என்ற செய்தியை முஸ்லிம் சமூகம் சொல்லியுள்ளது.
கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் 98 வீத வாக்குகளை பெற்ற முஸ்லிம் கட்சிகளால் கிழக்குக்கோ, வேறு மாகாணத்துக்கோ தம்மால் ஒரு ஆளுநரை பெற முடியாத நிலையில் இளைஞரான, சில வருடங்களுக்கு முன்பே பாராளுமன்ற உறுப்பினரான இ.தொ.கவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்களின் விவேகமிக்க அரசியல் சாதுர்யத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இந்த ஆளுனர் பதவியை பார்க்கிறோம்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி 1994ம் ஆண்டு அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தும், அஷ்ரப் மட்டும் கெபினட் அமைச்சராக இருந்தும் மிகவும் பெறுமதிமிக்க ஒரு ஆளுநர் பதவியை அக்கட்சி பெறவில்லை.
2000ம் ஆண்டு முதல் 2003 வரை ரவூப் ஹக்கீம் கெபினட் அமைச்சரானார். ஒரு மாகாணத்துக்கும் ஆளுநர் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை.
2004 முதல் 2015 வரை ரிஷாத் பதியுதீனும், அதாவுள்ளாவும், 2006 முதல் 2015 வரை ஹக்கீமும் இடையில் சில வருடம் எதிர்க்கட்சிக்கு தாவியிருந்தார். மூவரும் கெபினட் அமைச்சர்களாக, மஹிந்த அரசுக்கு முட்டுக்கொடுத்தும் ஒரு ஆளுனரை பெற முடியவில்லை.
2015 முதல் ஹக்கீமும், ரிசாதும் ரணில் மைத்திரியின் நல்லாட்சிக்கு முட்டுக்கொடுத்த போதும் இவர்களால் ஒரு ஆளுநரைப் பெற முடியவில்லை.
இப்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதேச சபை உறுப்பினரும் இல்லாத ஜீவன் தொண்டமானின் கட்சி ஆளுநரை பெற்றுள்ளது என்பது வரலாற்று நிகழ்வாகவே நாம் பார்க்கிறோம்.
அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் இரண்டு மாகாணங்களுக்கு இரண்டு தமிழரை நியமித்து தமிழ் மக்களை கௌரவப்படுத்தியுள்ளதுடன் இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் கௌரவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)