
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலங்கையில் வெசாக் வாரம்
இலங்கையில் வெசாக் வார நிகழ்வுகள் மிகவும் சிறப்புற ஆரம்பமாகியுள்ளதுடன், வெசாக் பூரணை தினமான இன்று (05) நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.
வெசாக் வாரத்தையொட்டி நாட்டிலுள்ள பௌத்த விகாரைகள் மற்றும் பாதுகாப்பு படை முகாம்களிலும், வங்கிகள் மற்றும் முக்கிய இடங்களிலும் பௌத்த கொடிகள் மற்றும் வெசாக் கூடுகள், மின் அலங்காரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்த வெசாக் பண்டிகை, நாட்டின் நிலமை, கொவிட் பரவல் காரணமாகக் கடந்த மூன்று வருட காலமாக சோபிக்காத நிலையிருந்தும், இம்முறை வெகு விமரிசையாக ஆரம்பமாகியுள்ளன.
தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றைய (05) தினம் பௌத்த ஆலயங்களில் வெசாக் பூரணை தினத்தையொட்டி பெருந்தொகையில் மக்கள் திரண்டு விசேட வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதேவேளை பல இடங்களிலும் தன்சல் எனப்படும் வெசாக் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், வெசாக் கீத நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
மேலும், மின் விளக்கு அலங்கார செயற்பாடுகள், வெசாக்கூடுகளின் மின் அலங்காரங்கள், பந்தல்களைக் கண்டு மகிழ்வதற்கு இரவு வேளையிலும் பௌத்த மக்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும் குறித்த அலங்காரப் பகுதிகளில் திரண்டு வருவதும் விசேட அம்சமாகும்.
வெசாக் பூரணையை முன்னிட்டு நாட்டில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வெசாக்கையொட்டி ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் 998 கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செயற்பட்டுளள்தாகவும் இதில் ஆறு பெண்களும் அடங்குவதாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூவித இரத்தினங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட வெசாக் பௌர்ணமி தினம் பௌத்த நாட்காட்டியின் மிக முக்கியமான நாட்களில் ஒன்று என்பதோடு இது புனிதத்துவமான முக்கியத்துவம் கொண்டுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க வெசாக் தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய வெசாக் தின வைபவங்கள் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு பௌத்த சாசன விவகார அமைச்சினால் இன ஐக்கிய வைபவமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு வெசாக் பண்டிகை கோலாகலமாக நாட்டில் ஆரம்பமாகியுள்ள நிலையில்தான், வடக்கில் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றுமாறு கோரி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பௌத்த ஆக்கிரமிப்புக்கும் எல்லைதான், முடிவுதான் இல்லையோ மக்களின் அங்கலாய்ப்பு மறுபக்கம்!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)