
posted 7th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள்
மதுரங்கேணிக்குளம் பிரதேசத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அங்குள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
எல்லைக் கிராமங்களில் தமிழரசுக் கட்சியின் வட்டாரக் கிளைகளை அமைப்பது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட குழுவினர் குடும்பிமலை, இரணைக்குளம், மருதங்கேணிக்குளம், பனிச்சங்குளம் ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது மருதங்கேணிக்குளம் பிரதேசத்திலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தினரின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடிய சாணக்கியன் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்வதையறிந்த ஆதிவாசிகள் சமூகத்தினர் அவர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செய்திருந்ததுடன், தங்களது சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தமது கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.
இதன்போது கடந்த காலத்தில் மருதங்கேணிக்குளம் பிரதேசத்தில் வசித்துவருகின்ற ஆதிவாசிகள் சமூகத்தினரின் பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் உள்ளடங்கிய குழுவினர் விரிவாகக் கேட்டறிந்து கொண்டனர்.
குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஆதிவாசிகள் சமூகத்தினர் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருந்தது.
மேலும், 2008 ஆம் ஆண்டு மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்தக் காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஆதிவாசிகள் சமூகத்தினர் எடுத்துக்கூறியிருந்தனர்.
அத்துடன், இதுவரையான காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தமது இடத்திற்கு முதற் தடவையாக வந்து தமது பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டமைக்காக ஆதிவாசிகளின் தலைவர் உள்ளிட்ட சமூகத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் உள்ளிட்ட குழுவினருக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)