
posted 13th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அமரர் நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி
பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள மட்/பட்/ துறைநீலாவணை மகாவித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இவ் வித்தியாலய அமரர் நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் அதிபர் தி.ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஸ்ரீதரன் பிரதம அதிதியாகவும், முன்னாள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருமதி. நகுலேஸ்வரி - புள்ளநாயகம் அதிசிறப்பு அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பு. திவிதரன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட கம்பர் இல்லத்திற்கான வெற்றிக் கிண்ணத்தை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சி. ஸ்ரீதரன் மற்றும் அதிதிகள் இணைந்து வழங்கி வைத்தனர்.
துறைநீலாவணையின் சமூக முன்னோடியாகவிருந்த அமரர் நாகேந்திரனின் நாமத்தில் இந்த விளையாட்டு மைதானத்தை பல இலட்சம் ரூபா நிதியில் அமைத்துக் கொடுத்த அவுஸ்ரேலியாவில் வாழும் பொறியியலாளர் நாகேந்திரன் - மேகநாதனின் தாயார் திருமதி. நேசமணி - நாகேந்திரன் இவ் விழாவில் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் அமரர் நாகேந்திரனின் புதல்வர்கள் துறைநீலாவணை மண்ணின் கல்வி சமூக பொருளாதார மேம்பாட்டுக்காக ஆற்றிவரும் தன்னலமற்ற சேவைகள் குறித்து அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செல்லையா - பேரின்பராசா சிறப்புரையாற்றினார். அவர் தனதுரையில்;
துறைநீலாவணை மண்ணில் வாழும் மக்கள் மார்தட்டிப் போர் புரிந்த வீர வரலாறு படைத்தவர்கள். இத்தகைய பெருமைமிக்க மண்ணின் சமூக முன்னோடியாக வாழ்ந்தவர் அமரர். வேலுப்பிள்ளை நாகேந்திரன். இவரின் தந்தையார் ஒரு தலைமை ஆசிரியர். துறைநீலாவணையின் கல்வி வரலாற்றில் ஆங்கில மொழிமூலம் கல்வி கற்று அரச துறையில் இலிகிதராகப் பணியாற்றியவர். அன்னார் புகழ் பூத்த கரப்பந்தாட்ட விளையாட்டு வீரர். இத்தகைய பெருமகனின் இளைய புதல்வரான பொறியியயலாளர் நா. மேகநாதனிடம் துறைநீலாவணை மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராக 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பதவி வகித்த வேளையில் இப்பாடசாலைக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துத் தர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். அவர் எனது கோரிக்கையை ஏற்று இருபது இலட்சம் ரூபாவை என்னிடம் வழங்கினார். இதனால் மலர்ந்ததே இந்த மைதானம்.
இதன் தொடராக புலம்பெயர் தேசத்தில் வாழும் துறைநீலாவணை உறவுகளின் ரீ.என். அமைப்பு உறவுகள் இந்த மைதானத்தை செப்பனிட பங்களிப்பு செய்துள்ளனர். இருப்பினும் இந்த மைதானத்தை அமைக்க முதலில் பங்களிப்பு செய்த பொறியியலாளர் மேகநாதனின் தந்தையின் நாமத்தில் இந்த மைதானத்தின் நாமம் இருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.
இதே போன்று இவர்களின் குடும்பத்தினர் ஆற்றிவரும் சமூகப் பணிகள் தொடர வல்ல இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றார்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)