
posted 16th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மனித உரிமை பணிமனையை முற்றுகையிட்டுப் போராட்டம்
வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்ட 8 பேரின் உறவினர்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிமனையை முற்றுகையிட்டு நேற்று (15) வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியா சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமது உறவுகளின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. அவர்கள் விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட வேண்டும் என்று கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
தமது உறவுகளின் உடல்நிலை மோசமடைவதால் அவர்கள் விடயத்தில் கரிசனை கொள்ளுமாறு கோரி கைதிகளின் உறவுகள் முன்னதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிமனைக்கு சென்றனர். அங்கு, நிறைவேற்று அதிகாரிகள் இல்லாதநிலையில், அங்கிருந்தவர்களும் முறைப்பாடு செய்யச் சென்றவர்களுடன் உரையாடவில்லை. இதைத் தொடர்ந்தே அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வந்த உயர் அதிகாரிகள் இன்று (16) சிறைச்சாலைக்கு சென்று கைதிகளை பார்வையிட்டு அவர்களின் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தனர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)