
posted 6th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பள்ளிமுனை மீனவர்கள் கவனவீர்ப்பு போராட்டம்
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களால் இன்று (06) புதன் காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பள்ளிமுனை புனித லூசியா மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போராட்டமானது பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதிக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பமானது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னார் மாவட்ட செயலகம் வரை அமைதியான முறையில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் முந்தல் காணி எல்லை மற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை மற்றும் சிறு தொழில் மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள கரையோர கடலட்டைப் பண்ணை போன்றவற்றை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பிரச்சினைகள் குறித்து ஏற்கனவே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என குறித்த கிராம மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இப் போராட்டத்தில் பள்ளிமுனை பங்குத்தந்தை, கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)