
posted 24th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பால் புரைக்கேறியதால் உயிரிழந்த சிசு
பால் புரைக்கேறியதில் 28 நாள் சிசுவொன்று யாழில் உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சசிக்குமார் பிரதீபா எனும் சிசுவே உயிரிழந்துள்ளது.
தயார் நேற்று முன்தினம் (22) வெள்ளிக்கிழமை சிசுவுக்கு பால் ஊட்டி விட்டு , குழந்தையை படுக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தை அசைவின்றி காணப்படுவதனை அவதானித்து , குழந்தையை எழுப்பியபோது குழந்தை மயக்கமான நிலையில் காணப்பட்டமையால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
மருத்துவ ஆலோசனைக்கு எதிராக வெளியேறியவர் வீதியில் உயிரிழந்தார்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய நிலையில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் தலையாழி பகுதியைச் சேர்ந்த பஞ்சலிங்கம் தினேஷ் என்ற 44 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் மூச்செடுக்க சிரெமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வேறொரு விடுதிக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டபோதே நேற்று முன் தினம் (22) வெள்ளி மாலை வைத்தியசாலையின் பின்பக்க நுழைவாயில் ஊடாக தீடிரென வெளியேறி சிறிது நேரத்தில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
அதிகளவிலான மதுபானப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் உடலில் ஏற்றப்பட்ட கனூலா கழற்றப்பட்ட நிலையில் இரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
14 வர்த்தகர்களுக்கு ரூ. 174,000 அபராதம்
சங்கானையில் 14 உணவு கையாளும் வர்த்தகர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே இவர்கள் சிக்கினர்.
புதன் கிழமை (20) 14 வர்த்தகர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், குற்றத்தை ஏற்றுக் கொண்ட வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சத்து 74 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
கடலில் நீராடிய இருவர் அலையில் சிக்கி மரணம்
கடலில் நீராடியபோது அலை இழுத்துச் சென்ற ஒருவரும் அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றொருவருமாக இருவரும் உயிரிழந்தனர்.
கடந்த புதன்கிழமை (20) மாலை இளவாலை - சேந்தாங்குளம் கடலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், தேவகருணதாஸா ஜூட் (வயது 37), சிவநேசன் திபிசன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இவர்கள் வவுனியாவின் தங்கன்குளம், செட்டிக்குளத்தை சேர்ந்தவர்களாவர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்தவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் - ஆரியகுளத்தில் உள்ள விடுதி ஒன்றில் வந்து தங்கியுள்ளார். அவரும் அந்த விடுதியின் உரிமையாரும் அங்கு பணியாற்றிவரும் ஊழியருமாக மூவர் நேற்று சேந்தாங்குளம் கடலில் சென்று நீராடியுள்ளனர்.
இதன்போது, ஒருவர் கடல் அலையால் இழுத்துச் செல்லப்படுகையில் அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றவரவரும் நீரில் மூழ்கி காணாமல் போயினர். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியினைச் சேர்ந்தவர்கள் இருவரையும் தேடியும் பயன்ற்றுப் போனது. ஆனால், இறுதியில் அவர்கள் இருவரும் சடலங்களாகவே மீட்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)