
posted 18th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தமிழ் விவசாயிகள் புறக்கணிப்பு
அரசாங்கம் சிங்கள விவசாயிகளின் நெல்லை மட்டும் கொள்வனவு செய்கின்றது ஏன்? தமிழ் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்யவில்லை என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெத்தினம் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கவலை வெளியிட்டார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அவர் மேலும் தெரிவிக்கையில் பின்வருமாறு கூறினார்.
அம்பாந்தோட்டப் பகுதியில் சிங்கள விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு விவசாய அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்து நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக நெல்லை உரிய விலைகளுக்கு கொள்வனவு செய்வதாக தெரிய வருகின்றது.
ஏன் தமிழர்களுடைய பகுதியாகிய மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயிகளின் நெல்லை நெல் சந்தைப்படுத்தும் சபையால் கொள்வனவு செய்யப்படவில்லையென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஏன் இந்த விடயத்தில் அரச அபிவிருத்தி குழு தலைவர்கள் மௌனம்?
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு மழையினாலும், பாரிய வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு அறுவடை செய்தும் பல இடங்களில் அறுவடை செய்ய முடியாமலும் பல நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் கைவிடப்பட்டு பாரிய நட்டத்தில் விவசாயிகள் உள்ளனர்.
குறிப்பாக. விவசாயிகள் வங்கிகளிடம் கடன்களைப் பெற்றும், நகைகளை அடகு வைத்தும், கால்நடைகளை விற்றும் செய்த வேளாண்மை செய்கையில் எதிர்பார்த்திருந்த விளைச்சல் கிடைக்காததால் பாரிய நட்டம் ஏற்பட்டு சொல்லொண்ணா துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கூடுதலான விளைச்சலை பெற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் ஏன் வேளாண்மைச் செய்கையில் நட்டத்தில் உள்ளது? நீர்பாசனப் பொறிமுறைகள் சரியாக கையாளப் படுகின்றதா?
உரிய நேரத்திற்கு விதைக்கப்படுகின்றனவா? அரசாங்கத்தால் உரிய நேரத்திற்கு விவசாய உள்ளீடுகள் வழங்கப்படுகின்றனவா? என்னும் பல கேள்விகள் விவசாயிகளிடம் தொக்கி நிற்கின்றன.
கடந்த பெரும் போகம் மழை காரணமாகவும், வெள்ளம் காரணமாகவும் பாதிக்கப்பட்டு எதிர்பார்த்த விளைச்சல் விவசாயிகளுக்கு கிடைக்காததால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
கடந்த போகங்களில் வசதி உள்ள விவசாயிகள் நெல்லை உலர வைத்து தகுந்த விலைக்கு தனியாருக்கு விற்பனை செய்தவர்கள் ஒருசிலர் உண்டு. வசதி வாய்ப்புக்கள் இல்லாத ஏழை விவசாயிகள் செய்வதறியாது நெல்லைப் பாதுகாத்து வைத்திருக்க முடியாமல் மிகக் குறைந்த விலையில் நெல்லை விற்பனை செய்து நட்டம் ஏற்பட்டதால் சொல்ல முடியாத துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
சில வசதி படைத்த விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை நன்றாக உலர வைத்து களஞ்சியப்படுத்தி அதிக விலைகளுக்கு நெல்லை விற்கக்கூடிய காலத்தில் நெல்லை விற்பனை செய்வதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ஆனால், மழையினாலும்,வெள்ளத்தினாலும் அனைத்து விவசாயிகளும் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொண்டு விசேட நஸ்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் அணுசரணையுடன் செயற்பட்டு வருகின்ற அபிவிருத்திக் குழுத்தலைவர்கள் அரசின் கவனத்திற்கு இதை கொண்டு செல்வார்களா என அவர் கேள்வி எழுப்பினார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)