
posted 7th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அகற்றப்பட்ட புத்தர் சிலை
சுழிபுரத்தில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிய வருகின்றது.
சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்துக்குப் பின்புறமாக, அரச மரத்தின் மூன்று தினங்களுக்கு முன்னர் புத்தர் சிலை வைக்கப்பட்டது.
அங்குள்ள கடற்படை முகாமை சேர்ந்தவர்களால் இந்த சிலை வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
புத்தர் சிலை வைக்கப்பட்டமைக்கு எதிராக இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்றும் அந்தப் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் புத்தர் சிலை வைத்ததால் அதனை அகற்றுமாறு கோரி இன்றையதினம் சனிக்கிழமை போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
போராடினால் மட்டுமே இனம் வாழும். போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாதென்பவர்கள், இனியாவது எம்மோடு கைகோர்ப்பார்கள் என்று நம்புகின்றோம். இனத்துக்காக இறுதிவரை விடிவுவரை போராடுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)