
posted 8th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். இந்திய துணை தூதரகத்தை போராட்டங்களால் முடக்குவோம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகம் முன்பாக தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் - இவ்வாறு எச்சரித்துள்ளார் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் தலைவர் பாக்கியநாதன் றேகன்.
யாழ். மாவட்ட மீனவ அமைப்புகளின் சம்மேளனத்தின் பணிமனையில் நேற்று (06) புதன் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் முன்பாக இழுவைமடி தொழிலுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியிருந்தோம். இதற்கான தீர்வு எதனையும் இந்திய துணைத் தூதரகம் எங்களுக்கு பெற்றுத்தரவில்லை.
இந்தியத் துணைத் தூதரகத்திடம் நாங்கள் மனு அளித்துள்ளோம். அவர்கள் இன்றுவரை எங்களுக்கு பதில் தரவில்லை. இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் வீசா கொடுப்பதற்கு மட்டும்தான் இருக்கிறது. எங்களுக்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.
இந்திய மக்களால்தான் எங்களுக்கு பிரச்சினையாக உள்ளது. ஆனால், அந்தப் பிரச்சினையை தீர்க்குமாறு கூறினாலும் தூதரகம் அதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. எத்தனையோ தடவை எமது கடற்றொழில் சமூகம் சார்பில் மனுக்களை இந்திய தூதரகத்திடம் கொடுத்துள்ளோம். ஆனால், இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இனிவரும் நாட்களில் நாங்கள் இந்திய துணை தூதரகம் முன்பாக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி ஏற்படும். அவர்களின் சேவைகளை முடக்க வேண்டிய கட்டம் ஏற்படும். ஏனென்றால், இவர்கள் மக்களின் பிரச்சினைகளை இதுவரை இந்தியாவின் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லவில்லை. இது எமக்கு மிகவும் கவலையை அளிக்கிறது. எனவே இந்தியத் துணைத் தூதரகம் மத்திய அரசின் பதிலை எமக்குக்கூற வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)