
posted 26th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சொகுசு பேருந்து மோதி கொடிகாமத்தில் ஒருவர் பலி
மீசாலையில் அதிசொகுசு பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று (26) திங்கள் இரவு 10:30 மணியளவில் ஏ-9 வீதியில் மீசாலை வீரசிங்கம் கல்லூரி முன்பாக இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த அதி சொகுசு பேருந்து பாதசாரிக் கடவையில் பிறிதொரு வாகனத்தை வேகமாக முந்திச் செல்ல முற்பட்டது. அப்போது, கிளிநொச்சியிலிருந்து கைதடி நோக்கி மோட்டார் சைக்கிளை மோதியதில், அதனை செலுத்திச் சென்றவர் விபத்திற்குள்ளாகி உயிரிழந்தார்.
கிளிநொச்சி - விவேகானந்த நகரை சேர்ந்த சின்ராசா சுதன்ராஜா (வயது 41) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய பேருந்து நிற்காமல் தப்பியோடிய நிலையில் அதனைத் துரத்திச் சென்ற கொடிகாமம் பொலிஸார் பேருந்தின் சாரதியையும் நடத்துநரையும் கைது செய்தனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து வருகின்றனர்.
புங்குடுதீவில் விபத்தில் சிக்கியவர் மரணம்
புங்குடுதீவில் ஆலயத்துக்கு சென்றுவிட்டு, நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவை சேர்ந்த ஜோசன் கஜேந்திரன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
புங்குடுதீவுப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கடந்த 20 ஆம் திகதி சென்று விட்டு, தனது வீடு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெற்றோரின் கவலையீனம் ஆஸ்மாச் சிறுவனை காலனிடம் கையழித்தது
யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக அவதிப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பெற்றோர் மருந்து எடுத்துள்ளனர்.
ஆனாலும், மருந்தைச் சிறுவனுக்கு வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (23) அதிகாலை சிறுவன் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அச் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.
மரண விசாரணைகளை திடீர் இறப்புவிசாரணை அதிகாரி ந. பிறேம்குமார் மேற்கொண்டார். பெற்றோர் சிறுவனுக்கு உரிய சிகிச்சையளித்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)