
posted 14th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தில் ஒருவரைக் காவுகொண்ட ரிப்பர்
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்று முன் தினம் (12) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளொன்றை ரிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர் பொன்னகர் பகுதியை சேர்ந்த 34 வயதான சந்தானம் புஸ்பராசா எனத் தெரிய வந்துள்ளது. அத்துடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளை ஈயின் தாக்கத்தை அவதானித்தால் தொலைபேசிக்கு அழையுங்கள்
வறட்சியான காலநிலையுடன் தென்னை செய்கையில் வெள்ளை ஈயினால் சேதம் ஏற்படுத்துப்படுவதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் தங்கொட்டுவ, நாத்தாண்டிய, சிலாபம், முகுனுவடவன, ஆரியகம, பட்டுலுஓயா மற்றும் முந்தல் ஆகிய பிரதேசங்களில் வெள்ளை ஈக்களின் சேதம் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
தென்னை பயிர்ச்செய்கைச் சபையானது, நாட்டின் ஏனைய பகுதிகளில் வெள்ளை ஈ நோய் உள்ளதா என்பதை ஆராயுமாறு பயிர்ச் செய்கையாளர்களிடம் கோரியுள்ளது.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்னை பயிர்ச்செய்கை சபைக்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
தென்னை ஆராய்ச்சி நிறுவனம் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட தேங்காய் எண்ணெய் மற்றும் சோப்புத் தூள் கலவையை தெளிக்க ஏற்பாடு செய்துள்ளதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னைப் பயிர்ச்செய்கையில் வெள்ளை ஈ அல்லது ஏதேனும் நோய் மற்றும் பூச்சிகளால் சேதம் ஏற்பட்டால், லுணுவில தென்னை அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள தென்னை பயிர்ச்செய்கைக்கான தேசிய அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு பிரிவை *032-3135255* என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு 1228 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும். தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கன்னொருவ தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் 1920 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் வெள்ளை ஈ சேதம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சதி மூலம் ஆட்சிக்கு வந்ததை கோட்டாவின் நூல் மறந்து விட்டதா - வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் எழுதிய நூல் குறித்து வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அண்மையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்ட நூலில் தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்ற சர்வதேச சதி நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் சர்வதேச சதியில் ஈடுபட்ட நாடுகள் தொடர்பில் வெளிப்படையாக பதிவு செய்ய தவறி விட்டார் என்ற பெரும் விமர்சனத்துக்கு அப்பால் ரஷ்ய தூதரகம் கோட்டாபய சதியை ஏற்படுத்திய நாடுகளை குறிப்பிட வேண்டும் என தமது கருத்தை பதிவு செய்துள்ளது.
கர்தினால் றஞ்சித் ஆண்டகை தொடர்ந்து குறிப்பிடும் விடயம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்காக நடத்தப்பட்ட சதி நடவடிக்கை என்றும் அதன் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக கூறிவருகிறார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக ஐக்கிய நாடுகள் சபையின் கதவுகளையும் தட்டியுள்ளார். இந்த சர்வதேச சதி தொடர்பில் கோட்டாவின் நூல் குறிப்பிட மறந்து விட்டதா?
சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் ஜனாதிபதிகள் எல்லோரும் சர்வதேச நாடுகளின் குறிப்பாக பூகோள நாடுகளின் உதவியுடன் தான் வந்தனர் எதிர் காலத்திலும் இது தொடரும். இதனை தடுக்க ஒரே வழி தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான். ஆனால் ஆட்சிக்கு வரத் துடிக்கும் பேரினவாதக் கட்சிகள் இதனை விரும்பமாட்டார்கள். இதனையும் தாண்டி நாட்டின் நிரந்தர அமைதிக்கும் உள் நாட்டில் சர்வதேச சதிகளை அல்லது ஆதிக்கங்களை கட்டுப்படுத்த சகோதர இனங்களின் அபிலாசைகளை மதித்து அதிகாரங்களை பகிர்வதே நாடு முன்னோக்கி செல்ல வழி திறக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)