
posted 24th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தொடரும் ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி
அண்மைய கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தின் காரணமாகவும் மற்றும் பல காரணங்களினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ள அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் வகையிலான சந்திப்பொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸுக்கும் இடையே ஆளுநர் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர்களின் பிரச்சினைகள், முக்கிய பாடங்களுக்கு பதிலாளின்றிய இடமாற்றம் நடைபெற்றதால் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, அம்பாறை மாவட்ட பாடசாலைகளின் உள்ள ஆளனி விடயங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு விளக்கினார்.
சகல பிரச்சினைகளையும் கேட்டறிந்த ஆளுநர் அதனையடுத்து கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்து பிரச்னைகளுக்கு தீர்வை வழங்குமாறும், குறித்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸுடன் கலந்துரையாடுமாறும், அடுத்த வார ஆரம்பத்தில் இது தொடர்பில் எடுத்த நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.
அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலந்திரகுமார் ஆகியோர்களுக்குமிடையில் இது சம்பந்தமான சந்திப்போன்று கல்முனை மாநகர சபை காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது முக்கிய பாடங்களுக்கு பதிலாளின்றிய இடமாற்றம் நடைபெற்றதால் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, அம்பாறை மாவட்டப் பாடசாலைகளின் உள்ள ஆளனி விடயங்கள் தொடர்பில் சட்டத்தரணி எச். எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு விளக்கினார். இதன்போது அங்கு கலந்து கொண்டிருந்த கல்முனை கல்வி வலய திட்டமிடல் பிரதிக் கல்வி பணிப்பாளர் வரணியா சாந்தரூபன் புள்ளிவிபரங்களுடன் கல்முனை கல்வி வலய ஆசிரியர் நிலைகளை விளக்கி பாடசாலைகள் பாதிக்கப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தினார்.
சகல விடயங்களையும் ஆராய்ந்துணர்ந்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உடனடியாக இந்த பிரச்சினைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)