
posted 23rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வு
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது, களுதாவளை பொதுமக்கள், கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சர்வதேச மகளிர் தின பிரதான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் களுதாவளை பிள்ளையார் ஆலய முன் வீதி வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
"அவளுடைய பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான மகளிர் தின நிகழ்வில் முதன்மை அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமாகிய திருமதி. ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பிரதான நிகழ்வினையொட்டியதாக பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு இடம்பெற்றதுடன், ஓவிய காட்சிப்படுத்தலும், பிரதி விம்ப ஓவியம் வரைதல் நிகழ்வும் இடம்பெற்றது.
மானுட விளக்கேற்றலைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாயின.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச கலைஞர்களினால் பாரதியார் பாடல் மற்றும் நாடகம் என்பன ஆற்றுகை செய்யப்பட்டதுடன், "சரித்திர மங்கையரின் சமூக செய்தி" எனும் இயலும், இசையும் நிகழ்வும் ஆற்றுகை செய்யப்பட்டது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் "தற்கால மகளிருக்காய் ...." எனும் தலைப்பிலான கருத்தாடல் களமானது அனைவரினதும் வரவேற்பை பெற்றது. இதனை ஆசிரிய ஆலோசகர் திருமதி வனிதா சுரேஸ் அவர்கள் தொகுத்து வழங்கியிருந்தார்.
பிரதேச செயலக பிரிவிலிருந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், நடன கலை, பாரம்பரிய மருத்துவிச்சி, விளையாட்டு சாதனையாளர், சிறந்த சமூகசேவை மாதர், மாற்றுத்திறனாளி விளையாட்டு சாதனையாளர் எனும் துறைகளின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு "மாண்புறு மங்கையர்" கெளரவிப்பு வழங்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது.
நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், களுதாவளை கிராம ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)